இந்தியா பூஜ்யமல்ல
-கணியன் : திசைகள்-
பிகார் என்றதும் உங்கள் மனதில் என்ன சித்திரம் தோன்றும்? லாலு-ராப்ரி? ஜாதி சண்டைகள்? கடத்தப்படும் குழந்தைகள்? கால்ந்டைத் தீவனம்? வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 'நாகரீகமற்ற' ஏழை இந்தியர்கள்?
நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று பீகாரில் நடந்து வருகிறது. பட்வா டோ லி என்பது பீகாரில் உள்ள ஒரு கிராமம். அந்த ஒரு கிராமத்திலிருந்து மட்டும் இதுவரை 100 பேர் ஐ.ஐ.டிகளில் சென்று சேர்ந்திருக்கிறார்கள். (ஆம். ஐ.ஐ.டிகளில்!) ஆண்டுக்கு ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சற்று கூர்ந்து பார்த்தால் அது ஒன்றும் ஆச்சரியமாகத் தோன்றாது. ஏனெனில் அங்கு ஐஐடியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்கென்றே ஒரு அமைப்பு 'சிஸ்டமாடிக்'காக செயல்பட்டு வருகிறது.அதை ஐஐடி பட்டதாரிகள், மாணவர்களே நடத்துகிறார்கள்.அது காசுக்கு நடத்தப்படும் கல்வித் தொழிற்சாலை அல்ல. அது ஒரு தன்னார்வத் தொண்டு.
ஜிதேந்திர குமார் என்ற அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு 1991ம் ஆண்டு ஐஐடியில் இடம் கிடைத்தது. படித்து முடித்த பிறகு 1997ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு ஐஐடியில் இடம் கிடைக்க உதவி செய்தார். இப்போது அந்த மாணவர்கள் அடுத்தவர்களுக்கு கை கொடுத்து வருகிறார்கள்.
இது பற்றி வீக் வார இதழ் தனது நவம்பர் 24 2002 இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. கிடைத்தால் படித்துப் பாருங்கள், மெய் சிலிர்க்கும்.
நுழைவுத் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்ற பட்டிமன்றச் சண்டைகளை அரசியல் கட்சிகளிடம் விட்டுவிட்டு, நம் ஐஐடி-யர்களும் இது போன்ற முயற்சிகளில் இறங்கினால் இரண்டு இந்தியாக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்துவிடாதா? பிகாரிலேயே இது சாத்தியம் என்றால் இங்கு நடக்காதா?
உயிரைக் காப்பாற்றிய மின்னஞ்சல்
வெங்கடாசலபுரத்தில் வசித்து வந்த அந்த ஏழைத் தம்பதியின் குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது. இதயத்தில் பிரசினை. அறுவைச் சிகிச்சை நடத்தினால் காப்பாற்றிவிடலாம், இல்லையென்றால்... என்று டாக்டர்கள் அறிவித்துவிட்டார்கள். அவர்கள் சுலபமாக சொல்லிவிட்டார்கள். ஆனால் பணத்துக்கு எங்கே போவது? ஏழைத் தம்பதிகள் வீடு வீடாக ஏறி இறங்கினார்கள். அறிவுரைகள் நிறையக் கிடைத்தன. ஆனால் போதுமான பணம் கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்த அறிவுரைகளில் ஒன்று அரசாங்கத்திற்கு விண்ணப்பியுங்களேன். அவர்களிடத்தில் இது போன்ற இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவ ஒரு திட்டம் இருக்கிறது என்பது. அவர்கள் மனுப்போட்டார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது.
விதியை நொந்து கொண்டு விரக்தியின் விளிம்பில் இருந்த அவர்கள் தற்செயலாக ஒருநாள் முருகேசன் என்ற இளைஞரை சந்தித்தார்கள். முருகேசன் அந்த கிராமத்தில் 'சிராக்' என்ற ஒரு கணினி மையம் நடத்தி வருகிறார். முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு பிரிவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். சூழ்நிலையின் தீவிரத்தையும் அவசரத்தையும் விவரித்தது மின்னஞ்சல். என்ன ஆச்சரியம்! மூன்று நான்கு நாட்களுக்குள் அரசு அதிகாரிகள் வெங்கடாசல்புரத்திற்கு வந்து விட்டார்கள். விபரம் உண்மைதானா என்று விசாரித்து அறிந்து கொண்டார்கள். நாட்டாமையை சாட்சி வைத்துக் கொண்டு உதவி அளித்தார்கள். குழந்தை கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து குழந்தை பிழைத்து விட்டது. இப்போது வெங்கடாசலபுரம் புழுதியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.!
தட்டம்மை ஒழிக!
புளியம்பட்டியில் 2002ம் ஆண்டு ஜூன் மாதம் திடீரென்று தட்டம்மை ( chicken pox) பரவத் தொடங்கியது. இரண்டு மூன்று வாரத்தில் கிடுகிடுவென்று பரவி 200 பேரைத் தாக்கியது.ஊர் மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அந்த ஊரில் இருந்த கணினி மைய இளைஞர் வட்டார வலர்ச்சி அதிகாரிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் 'அவசரம்' என்று போட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். பக்கத்து மாவட்ட மருத்துவ மனையிலிருந்து மருத்துவர்களும், செவிலியர்களும் வந்தனர். வீடூ வீடாகச் சென்று மருந்து கொடுத்தனர். தடுப்பூசி போட்டனர். ஒவ்வொரு நோயாளியின் ரத்தமும் சோதிக்கப்பட்டது.உரிலிருந்த தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இரண்டு வாரத்தில் அந்த ஊரிலிருந்து முற்றிலுமாக தட்டமை ஒழிக்கப்பட்டுவிட்டது.
அம்மாடி!
மதுரைக்கு அருகில் உள்ள மேலூர் தாலுகாவில் இருக்கிறது உலகப் பிச்சான்பட்டி. 2001ம் ஆண்டு அந்த ஊரில் பயிரிடப்பட்ட வெண்டைக்காய் செடிகள் முழுவதும் பலன் ஏதும் தராமலேயே அழிந்து போயிற்று. காசும் உழைப்பும் நஷ்டமாயிற்றே என்று இடிந்து போய்விடாமல் அந்த கிராம விவசாயிகள் மறு வருடமும் வெண்டையே பயிரிட்டார்கள். அடுத்தவருடமும் அதே நிலை.
அந்த சிறு கிராமத்தில் 18 வயதுப் பெண் ஒருவர் வங்கியில் கடன் வாங்கி ஒரு கணினி மையம் வைத்திருந்தார். அவர் மதுரை வேளாண்மைப் பல்கலைக் கழத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவிலிருந்து, நோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் படம் எடுத்து அனுப்ப முடியுமா என்று கேட்டு பதில் வந்தது. தன் மையத்தில் இருந்த வெப் கேமிராவைப் பயன்படுத்தி அந்தப் பெண் நோய்தாக்கப்பட்ட செடியைப் படம் எடுத்து அனுப்பி வைத்தாள். அந்தப் படத்தைப் பார்த்ததுமே விஞ்ஞானிகளுக்கு விஷயம் விளங்கி விட்டது. செடிகளைத் தாக்கியிருப்பது 'மஞ்சள் புள்ளி நோய்' என்பது. அதை போரான், திரவ நைட்ரஜன் கலவை கொண்டு அடித்துத் துரத்த முடியும் என்று அவர்கள் விளக்கமாக அந்தப் பெண்ணுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள். அடுத்த நாளே விவசாயிகள் களத்தில் இறங்கினார்கள். அந்தப் பெண்ணால் அந்த ஆண்டு காப்பாற்றப்பட்ட பயிரின் மதிப்பு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய்!
விழிப்புணர்வு பெற்ற உறங்கான்பட்டி
உறங்கான்பட்டியும் மதுரை மாவட்டத்தில்தான் இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் கட்டிட வேலைக்குப் போனார். போன இடத்தில் வேலை செய்கிற இடத்தில் ஏற்பட்ட சிறு விபத்தில் உயிரிழந்தார். இங்கே உறங்கான்பட்டியில் உள்ள அவர் மனைவிக்குத் தலையில் இடி இறங்கியது போல இருந்தது.காசு பணம் இல்லை என்றுதானே சம்பாதிக்கப் போனார். போன இடத்தில் இப்படி ஒரு கொடுமையா? அவரது முதலாளியிடம் நஷ்ட ஈடு கேட்கலாம் என்று யாரோ யோசனை சொன்னார்கள். எங்கே போய்க் கேட்பது? யாரைப் போய் கேட்பது? அந்தப் பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் வயதுக்கு வந்த பின் வீட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை. யாரோ ஒருவர் அவரை அருகிலிருந்த கணினி மையத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கிருந்த இளைஞர் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மனு ஒன்றை அனுப்பி வைத்தார். சில நாட்கள் கழித்து அங்கிருந்து பல காகிதங்கள் அடங்கிய பொட்டலம் ஒன்று வந்தது. அவற்றை நிரப்பிக் கையெழுத்திட்டு அனுப்புமாறு அத்துடன் இருந்த கடிதம் சொல்லிற்று. பார்சல் கிடைத்தது, ஒருவாரத்தில் எல்லா படிவங்களையும் அனுப்பி வைக்கிறோம் என்று கணினி மையம் இளைஞர் பதிலனுப்பினார்.மின்னஞ்சல் மூலம்தான். படிவங்கள் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பின்னர் சவுதியிலிருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வந்தது. இதைப் பெற ஆன செலவு வெறும் 30 ரூபாய் மட்டுமே!
கம்பியில்லை தம்பி
இவையெல்லாம் கதை அல்ல. உண்மைச் சம்பவங்கள். இதில் கணினி மையம் என்று குறிப்பிடப்படுவது சிராக் என்ற அமைப்பு நடத்தும் கணினி மையங்கள். இந்தக் கணினி மையங்கள் இந்தியா முழுக்க நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள என்லாக் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (n-Logue Communications Pvt Ltd) என்ற நிறுவனம் இந்த கிராமக் கணினி மையங்களை நிறுவி வருகிறத்து/ இவை இணைய இணைப்புக்காக தொலைபேசியை நம்பியிருப்பதில்லை. கோர்டெக்ட் (corDECT) என்ற கம்பியில்லா (wireless) தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்குகின்றன.
இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொடுத்தவர் அசோக் ஜுன்ஜுன்வாலா என்ற ஒரு மாமனிதர். சென்னை ஐஐடியில் மின்சாரப் பொறியியல் (Electrical Engineering) துறைப் பேராசிரியர்.இந்தியாவில் உள்ள 64 லட்சம் கிராமங்களைக் கணினி மூலம் இணைக்க வேண்டும் என்பது இவரது கனவு.ஆண்டுகு 20 ஆயிரம் கிராமங்களை எளிதாக இணைக்கலாம் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.
இந்த சிராக் மையங்களில், சிடிராம், மல்டிமீடீயாவுடன் கூடிய ஒரு கணினி, ஒரு வெப் காமிரா, பிரிண்டர், ஒலிபெருக்கி, மைக், நான்கு மணி நேரம் தாக்குப்பிடிக்கக் கூடிய UPS, இவற்றோடு சுவரில் மாட்டக் கூடிய கோர்டெக்ட் செட், இவையெல்லாம் இருக்கும்.
இந்தக் கணினி மையங்கள் ஒரு உள்ளூர் சேவை வழங்குநருடன் (Local service provider -LSP) இணைக்கப்படுகின்றன. அங்கு ஒரு DIU சுவிட்ச். அந்த LSPக்கள் பி.எஸ்.என்.எல். அல்லது டாடா, அல்லது ரிலையன்ஸ் சேவைகளுடன் இணைக்கப்படுகின்றன. ஒரு LSP 25 கீ.மி தூரத்திற்கு சேவை வழங்க முடியும். கோர்டெக்ட் தொழில் நுட்பம் 35kbps 70 kbps என்ற இரண்டு வேகங்களில் இணைப்பு வழங்குகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதை வைத்துக் கொண்டே வீடியோ கான்பெரன்சிங் போன்ற தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் செய்கிறார்கள். வீடியோ கான்பெரன்சிங் நடத்த 128 kbps இணைப்பு வேண்டும். ஆனால் இவர்கள் தரவுகளை நெருக்கி (compress) செய்து அனுப்புவதால் இது சாத்தியமாகிறது என்கிறார்கள்.
நீங்கள் மேலே உள்ள சம்பவங்களில் பார்த்த கணினி மைய இளைஞர்/ இளம் பெண் இவர்களெல்லாம் பத்தாம் வகுப்புத் தேறியவர்கள். ஐந்துவாரம் பயிற்சி. பயிற்சிக் கட்டணம் வெறும் முன்னூறு ரூபாய்.
ஓசையில்லாமல் ஒரு புரட்சி
இந்தியாவில் இது போல பல புரட்சிகள் சத்தமில்லாமல் கிராமப் புறங்களில் நடந்து வருகின்றன.
சென்னையில் உள்ள எம்.எஸ். சாமிநாதன் அறக்கட்டளை, கனடாவில் உள்ள இன்டெர்நாஷனல் டெவலப்மெண்ட் ரிசர்ச் சென்டர் (IDRC) என்ற அமைப்போடு சேர்ந்து பாண்டிச்சேரி அருகில் மீனவர்களுக்கான கணினி மையம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
குஜராத்தில் உள்ள அமுல் கூட்டுறவு அமைப்பு பால்வளப் பொருட்களுக்காக 'டிஸ்க்' (Dairy Information System Kiosk -DISK) என்ற ஒரு வலைப்பின்னலைத் துவக்கியிருக்கிறது. 2500 கிராமங்கள் இணைகப்பட்டுள்ளன. அந்தக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களான 70 ஆயிரம் பால் கூட்டுறவுச் சங்கங்களையும் இணைக்காமல் ஓய்வதில்லை என்று அது களம் இறங்கி இருக்கிறது.
அசோக் ஜுன்ஜுன்வாலா, அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள MIT மிடியா லாப். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெர்க்மென் சென்டர், ஐசிஐசிஐ வங்கி எல்லோருமாக இணைந்து 'சாரி' (Sustainable Access in Rural India -SARI) என்ற வலைப் பின்னலை மதுரை மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த இணைப்பின் ஒரு முக்கிய பலன், இது மதுரையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இதனால் கண்ணில் ஏற்படும் பிரசினைகளை, டெலிமெடிசின் உத்திகளைப் பயன்படுத்தி, ஆரம்பகட்ட ஆய்வுகளை நடத்துகிறார்கள். அவசியம் இருந்தால் ஒழிய இந்தப் பகுதி கிராம மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்குப் போக வேண்டியதில்லை.
சென்னையில் உள்ள பாரி நிறுவனம் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளுக்காக ஒரு வலைப்பின்னலை நடத்தி வருகிறது.
வைஃபி ( WiFi) என்பது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் செயல்பட்டுவரும் 'பணக்கார' தொழில்நுட்பமாக இருக்கலாம். ஆனால் கான்பூர் ஐஐடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மீடியா லாப் ஆசியா கான்பூரிலிருந்து லக்னோ வரை 75 கி.மீக்கு ஒரு வைஃபி தாழ்வாரத்தை உருவாக்கி இருக்கிறது. சாதாரணமாக வைஃபி 300 மீட்டர் சுற்றளவு வரைதான் எடுபடும். ஆனால் நம் கான்பூர் ஐஐடி ஆட்கள் சில ஆன்டெனாக்கள், ஆம்பிளிபையர்கள் இவற்றைக் கொண்டு அதை 35 கீமிக்கு நீட்டிவிட்டார்கள். குரல்வழித் தரவுகளை (voice data) பயன்படுத்த முடிகிறது, படங்கள் வீடியோக்களை அனுப்புவது சிரமம் என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள்.
ரிக்ஷாவில் கணினி மையம்
கான்பூர் ஐஐடிக்காரர்கள் இன்னொரு வேலையும் செய்திருக்கிறார்கள். அது நடமாடும் கணினி மையம். இன்போ தேலா (info thela) என்ற இந்தக் கணினி மையம் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் அமைக்கப்பட்டிருக்கும். இணையத்தை தொடர்பு கொள்ள கம்பியில்லா இணைப்புத் தொழில் நுட்பம். (wireless technology) கணினிக்கு மின்சாரம் தரும் கலன்கள் (பாட்டரிகள்) ரிக்ஷாவை தெருத் தெருவாக, கிராமம் கிராமமாக மிதித்துக் கொண்டு போகும் போது 'சார்ஜ்' பெறும்.
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க
இவையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிவரும் முயற்சிகள். ஆர்வமே பிரதானமாகக் கொண்டு நடைபெறும் முயற்சிகள். ஆனால் அதற்குள் அவற்றின் பலன்களை பன்னாட்டு நிறுவனங்கள் மோப்பம் பிடித்துவிட்டன. தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இந்தக் கிராமக் கணினி மையங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று இந்துஸ்தான் லீவர் போன்ற நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாக கேள்வி.
அசோக் ஜுன் ஜுன் வாலாவின் கனவு மட்டும் நிறைவேறிவிட்டதென்றால், அதாவது இந்தியாவில் உள்ள 65 லட்சம் கிராமங்கள் இணைய உலகத்தோடு இணைக்கப்பட்டுவிட்டால் அதன் மூலம் மருத்துவம், வேளாண் அறிவியல், வானிலை, சந்தை பற்றிய நிலவரங்கள் மட்டுமல்ல, கல்வியைக் கூட கொண்டு சேர்த்துவிடலாம். அது நடந்தால் இந்தியா இன்றிருப்பதை விட பல நூறு மடங்கு வலிமை கொண்ட ஒரு தேசமாக எழுந்து நிற்கும்.
கனவு மெய்ப்படுமா?






