www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சிரிப்பு

நான் வளர்கிறேனே மம்மி 3

நாமக்கல் சிபி -
அதென்னவோ தெரியலை! என்னைப் பால்வாடியில் கொண்டு போயி விட்டப்போ எனக்கு அங்க இருக்கவே பிடிக்கலை. அந்த ஆயாவைப் பார்த்து நான் ரொம்ப மிரண்டு போனதும் ஒரு காரணம். அதுக்கு முன்னாடி இருந்தே ஏதாவது ஒண்ணுன்னா அந்த ஆயாவைக் காட்டியே என்னைப் பயமுறுத்தியதால் அந்தப் பயம் அப்படியே இருந்தது.

பால்வாடிக்குப் பின்னாடியே பள்ளிக் கூடம். அதுல எங்கப்பாதான் தலைமை ஆசிரியர். அதனாலயே தைரியாமா பால்வாடிக்குப் போற மாதிரி பாவ்லா காட்டிட்டு பள்ளிக் கூடத்துல போய் ஒண்ணாவது படிக்கும் என் இன்னொரு பிரண்டு மாணியரசனோட போயி உக்காந்துக்குவேன். ஒண்ணாம்பு வாத்தியார் சிங்கராயன் சாரும் நான் ஹெட்மாஸ்டர் புள்ளை என்பதால் பேசாம விட்டுடுவார். ஆனாலும் பள்ளிக்கூடத்துக்குள்ள வந்துட்டா நம்ப குசும்பை எல்லாம் கொஞ்சம் அடக்கிக்குவேன். இல்லாட்டி திரும்ப பால்வாடிக்குப் போகணுமே. அப்படியும் எங்கப்பாவோ, எங்கம்மாவோ (மூணாங்கிளாஸ் டீச்சர்) என்னைப் பார்த்துட்டா அவ்வளவுதான். ரெண்டு அஞ்சாம்பு படிக்கும் சீனியர் பசங்க என்னை கையை ஒருத்தர், காலை ஒருத்தரா தூக்கிக்கொண்டுபோய்(ராக்கிங்க் !?) பால்வாடில விட்டுட்டு வருவாங்க!

கொஞ்ச நாள் ஆனதும் என்னோட படிப்பு ஆர்வத்தை(!?)ப் பார்த்துட்டு எங்கப்பாவே எனக்கு ஒண்ணாம் வகுப்பு தமிழ் புத்தகமும்(அட்டைப்படத்துல புலி போட்டிருக்கும், கடைசி பக்கத்துல காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு பாட்டு கூட இருக்கும்), ஒரு சிலேட்டு, ஒரு பலப்பம் எல்லாம் ஒரு மஞ்சல் பையில போட்டு இவன் இங்கயே இருக்கட்டும்ணு ஒண்ணாவதுல உக்கார வெச்சிட்டார்.
"இவன் இங்கயே இருக்கட்டும்ணு" சொன்னதுல இருந்த உள்குத்து அப்போ எனக்கு தெரியாம போச்சு!

வருஷக் கடைசியில வெச்சாருங்க பாருங்க ஆப்பு. நான் நல்லாப் படிச்சிருந்தும் எக்ஸாம் எழுத ஹால் டிக்கெட் குடுக்கலை. வயசு போதாதாம். அடுத்த வருஷம் பாஸானவங்க பேர் படிக்க ஒவ்வொருத்தரா ரெண்டாம் வகுப்புல போய் உட்காரணும். என் கூடவே இருந்த மணியரசனும் ரெண்டாவது போயிட்டான். நான் எவ்வளவோ அழுது அடம்பிடிச்சும் அந்த வருஷம் பெயில் (என்னைப் பொறுத்தவரை ஃபெயில்தானுங்களே) ஆனேன்.

அப்புறம் இந்த வருஷம் ஒண்ணாவதுல அஃபிஷியலா சேர்த்திக்கிட்டாங்க! தினமும் பேர் கூப்பிடுவாங்க! எக்ஸாம் எழுத ஹால் டிக்கெடடெல்லாம் பிரச்சினை இல்லாம குடுத்தாங்க! எங்களுக்கெல்லாம் சிலேட்டுப் பரீட்சைதான்.
நாலாவது, அஞ்சாங்கிளாஸ் பசங்களுக்குத்தான் அட்டைப் பரீட்சை எல்லாம்.

முழாண்டுப் பரீட்சை எழுதப்போற அன்னிக்கு எங்க அக்கா ரெண்டு பேரு, பக்கத்து வீட்டு அக்கா எல்லாரும் என்னை பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போய் திருநீரெல்லாம் பூசி விட்டு அனுப்பி வெச்சாங்க. அப்பாடா அந்த வருஷம் நல்ல வேளையா நான் பாஸ் ஆயிட்டேன். பின்னே ஏற்கனவே ஒரு வருஷம் படிச்ச சிலபஸ்தான.

இதுக்கப்புறம்தான் வீட்டுக்கு வெளியில போய் தெருவுல விளையாட ஆரம்பிச்சதெல்லாம். அப்போவெல்லாம் எங்கியாவது விஸேஷம்னாலோ, இல்லை யாராவது போய் சேர்ந்துட்டாலோ எதுவா இருந்தாலும் கண்டிப்பா மியூசிக் இருக்கும். உறுமி, தாரை, தப்பட்டை இதெல்லாம்தான் இருக்கும்.
எங்க இருந்து சத்தம் வந்தாலும் சரி! நான் வீட்டுக்குள்ள இருந்தா தானாவே ஆரம்பிச்சிருவேன். வெளியில இருந்தாலும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டாலும் கையும், காலும் நிச்சயமா நின்ன இடத்துல மியூசிக்குக்கு ஏத்தமாதிரி ஆடிகிட்டிருக்கும். ஆனா ஆடிப்பதினெட்டு அன்னிக்கு மட்டும் இந்த மியூசிக் கேட்டா எங்க இருந்தாலும் வீட்டுக்கு ஓடியாந்துடுவேன்.
பின்னே கோமாளி பிடிச்சிகிட்டு போயிட்டா.
ஆனா அந்த மியூசிக்ல இருக்குற சுகமே தனி, இப்ப கேட்டாலும் கூட அதே மாதிரிதான்.. என்னையும் மறந்துடுவேன் சில நேரம்....

"டண்டூண்டூம்..டண்டணக்கடி..டண்டூண்டூம்..டண்டணக்கடி"
"டண்டூண்டூம்..டண்டணக்கடி..டண்டூண்டூம்..டண்டணக்கடி"

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

 

நான் வளர்கிறேனே மம்மி 2

-நாமக்கல் சிபி
அப்போ எனக்கு அஞ்சு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். என் கூட விளையாடுற பையன் பேரு ரமேஷ். அன்னிக்கு பார்த்து என்கிட்ட சீக்கி (அதாங்க பஸ்ல கண்டக்டர்லாம் ஊதுவாங்களே, அதே மாதிரி பிளாஸ்டிக்ல இருக்கும்) இருந்ததுங்க. ஏதோ ஒரு பண்டிகைல வாங்குனது. எங்க வீட்டு வெளித் திண்ணைல ஒரு பெரிய மரக் கட்டில் இருக்கும். அதுலதான் என் அண்ணன், அக்காங்கள்ளாம் சேர்ந்து டூர் விளையாட்டு விளையாடுவோம். எப்பவுமே எங்க அண்ணந்தான் டிரைவரா இருப்பார். அந்த கட்டில்தான் பஸ்.

பஸ்ல(கட்டில்ல உக்காந்துகிட்டே) டீச்சர் (எங்க அக்கா ) "பசங்களா பார்த்துக்குங்க, அதுதான் கொடுமுடி முருகன் கோயில், அதுதான் ஆறு' ன்னெல்லாம் சொல்லுவாங்க. பசங்களான நாங்கள்ளாம் பஸ்ஸோட சன்னல்(!?) வழியா பார்த்துகிட்டே வருவோம். அப்புறமா பஸ்லயே எல்லாருக்கும் கிழங்கு, வேர்க்கடலை, கரும்பு எல்லாம் டீச்சர் தருவாங்க. (எங்க எல்லார் பங்கையும் சேர்த்து முன்னாடியே வாங்கி வெச்சிதுல இருந்து)

சில நாள் இது டூர் பஸ்ஸா இருக்கும், சில நாள் டிக்கெட் வாங்கணும். அவங்கவங்க ஊர் வந்தவுடன் கண்டக்டர் சொன்னவுடனும் இறங்கிக்கனும். இப்படியே விளையாடுவோம்.

இப்படித்தான் அன்னிக்கும் என் பிரண்டு ரமேஷை நான் பஸ் விளையாட்டு விளையாடலாமாண்ணு கூப்பிட்டேன். உடனே அவன் சொன்னான் "சரி விளையாடலாம்டா, நீதான் டிரைவராம், பஸ்ஸை ஓட்டணும் "ன்னான். உடனே நாம உஷாராயிட்டம்ல. நாம யாரு? "சரி டிரைவரே பஸ்ஸை ஓட்டுவாராம் அவரே சீக்கியும் ஊதுவாராம்" னு நான் சொன்னேன். அவன் மட்டும் சளைச்ச ஆளா? உடனே "சரி அப்போ நான் டிரைவரா இருக்கேன்"னு சொன்னான். நான் திருப்பி சொன்னேன், "சரி அப்போ கரெக்டா கண்டக்டர் சீக்கி ஊதுனவுடனே பஸ்ஸை நிறுத்தணும், திருப்பி ஊதினவுடன் பஸ்ஸை எடுக்கணும்"

என்ன ஆச்சுன்னு தெரியலை, கொஞ்ச நேரம் அமைதியா இருந்தான், திடீர்னு "நான் விளையாட்டுக்கு வரலே" ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டான். அதுக்கப்புறம் அவன் என் கூட எப்பவாவது விளையாண்டான்னா, இல்லையான்னெல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு முறை அவனே ஒரு பள்ளத்துல விழுந்துட்டு, நான் தள்ளி விட்டுட்டதா அவனோட தாத்தாகிட்ட பிராது கொடுத்துட்டான். அப்ப நான் சீக்கியை அவனுக்கு ஊதத் தரலைங்கறதை மனசில வெச்சிகிட்டுத்தான் இப்படிச் செஞ்சிருப்பானோன்னு நினைச்சிகிட்டேன்.

அதுக்கப்புறமா எனக்கு கிடைச்ச ஃபிரண்டு ஸ்ரீதர், எனக்கு சீனியர்தான். அவனோட அப்பா போஸ்ட் மாஸ்டரா இருந்தாரு. அவங்க வீடேதான் போஸ்ட் ஆபீஸ். வெளித் திண்ணைலதான் அவரோட பெரிய மேசை இருக்கும். அப்போ அந்த கிராமத்துல போஸ்ட் மேனெல்லாம் கிடையாது. ஏதாவது லெட்டர் வந்திருந்தா இவரு யாருகிட்டயாவது கொடுத்தணுப்பிருவாரு, இல்லைனா சொல்லியணுப்பினா வந்து வாங்கிக்குவாங்க.

நானும், ஸ்ரீதரும் விளையாட அவரோட போஸ்ட் ஆபீஸ் மேசைதான் கார். மேசையோட கீழே ஒரு பக்கம் கப்போர்டும், இன்னொரு பக்கம் காலியாகவும் இருக்கும். கப்போர்ட் இருக்குற பக்கம்தான் எங்களுக்கு காரோட டிக்கி. இன்னொரு பக்கம் டிரைவிங்க் சீட்டும், பின் சீட்டும். பக்கவாட்டுல ரெண்டு பக்கமும் கதவு இருக்குறதா நினைச்சி திறக்கும்போதும், மூடும்போதும் "டிக் டிக்" னு வாயாலயே சத்தம் எழுப்பிக்குவோம்.

அப்புறமா ஒரு நாள் சந்தையில இருக்குற கிணத்துல ஒரு பொணம் மிதக்குறதா எல்லாரும் பேசிக்கிட்டாங்க. எல்லாரும் போய் எட்டிப் பார்த்தாங்க. எங்களையெல்லாம் பார்க்க விடலை. நானும் ஸ்ரீதரும் இந்த விளையாட்டு கூட விளையாடுவோம். திண்ணைக்கு கீழே ஒருத்தர் உக்காந்துக்கணும். திண்ணை மேல இருந்து இன்னொருத்தர் தண்ணி சேந்தணும். தண்ணி சேந்தும்போது கிணத்துக்குள்ள (திண்ணைக்கு கீழே) பார்த்துட்டு அப்படியே கயிறை(நூலை!?) போட்டுட்டுட்டு ஓடிடணும். இதான் எங்க விளையாட்டு.

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

 

நான் வளர்கிறேனே மம்மி! - 1

-நாமக்கல் சிபி
1976ம் வருடம், மே மாமதம் சேலம் மாவட்டத்தில் அம்மையும் அப்பனுமாய் ஆணுக்குப் பெண் சரிபாதி என்று சிவபெருமானும், பார்வதி தேவியும் இரண்டறக்கலந்து அர்த்தநாரீசுவரரய் காட்சி தந்து அறுள்பாலிக்கும் திருச்செங்கோடு என்ற ஊரில் மலையின் அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ள சண்முகவடிவு மருத்துவ மனனயில் நாமக்கல் சிபியாகிய நான் அவதரித்தேன் என்று ஆன்றோர் கூறுவர்.

பிறந்தது முதல் முதல் 5 வயது வரை நான் செய்த குறும்புகள், நான் விளையாடியவை, உடன் விளையாடியவர்கள் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் எனக்கு நினனவில்லா விட்டாலும் கூட ஒரு சிலவற்றை என் பெற்றோர் கூறக் கேட்டிருக்கிறேன். இன்னும் சில எனக்கே இன்னும் நினனவில் உள்ளன.

குழந்தைப் பருவத்திலும் குசும்புடன்தான் இருந்திருக்கிறேன் என்று பெற்றோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தொட்டிலில் தூங்கவைக்கும்போது கூட திடீரென கால்களால் எம்பி எம்பி பின்புறமாக நகர்ந்து தலைமட்டும் தொட்டிலிக்குக் கீழே தொங்கும்படியாக செய்து அடிக்கடி பீதியைக் கிளப்புவேனாம்.

அதே போல் கைப் பெருவிரல் சப்பும் பழக்கம் இல்லை ஆனால் அதற்குப் பதிலாக கால் பெருவிரலாம்.

என் அக்கா இருவரையும் பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் விளையாடச் செல்லும்போதெல்லாம் என்னையும் தூக்கிக் கொண்டேதான் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பதால், முதுகில் பொத் பொத்தென்று இரண்டு போட்டவாறே தூக்கிக் கொண்டு செல்வார்கள். அதேபோல்தான் அவர்கள் சினிமாவிற்குச் செல்லும்போதும். எங்கள் ஊரிலிருந்து 2/3 கி.மீ நடந்து செல்லவேண்டும். என்னையும் தூக்கிக் கொண்டு செல்லவேண்டும் என்றால் எப்படி இருக்கும்.

அப்புறம் எங்கள் தாத்தா வீட்டிற்கு வரும்போது வாங்கி வரும் பிஸ்கெட் பாக்கெட் என்னிடம் கொடுக்கப்படும்போது கொஞ்சம் பிரிந்திருப்பதாய் நான் சந்தேகப் பட்டாலும் போதும். அப்படியே என் கையிலிருந்து பறந்து விடும். எங்கே போய் விழும் என்றெல்லாம் தெரியாது. அதே போல் பாலை பாட்டிலில் ஊற்றி என்னிடம் கொடுத்துவிட என் அப்பாவின் மடியில் அமர்ந்தவாறே அவரின் தொடைகளில் என் கைகளால் தாளமிட்டபடியே குடித்துவிட்டு, இரண்டாவது பெக் பாட்டிலில் ஊற்றிக் கொடுக்க சிறிது நேரம் அதிகம் ஆனாலும் போதும். பிறகு என்னை அடக்க அவர்கள் பட்ட பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.

பிறகு நான் டீவிரவாதியாக மாறிய பிறகு டம்ப்ளரில் டீ நிறைய இருக்க வேண்டும். இரு நூல் அளவு குறைந்தாலும் தகராறுதான். ஒரு சில நாட்கள் வெறுத்துப் போய் என் அம்மா கோபத்துடன் அந்த டீயிலேயே டம்ப்ளரை எடுக்க முடியாத வண்ணம் (டீயையோ அல்லது தண்ணீரையோ) ஊற்றி விட்டு இப்போ குடிடா பார்க்காலாம் என்று சொல்ல அப்போதும் சளைக்காமல் (பின்னே மீசையில் மண் ஒட்டுறதாவது, நாமெல்லாம் அப்பவே சங்கத்து ஆளுள்ள) டம்ப்ளரை கையில் எடுக்காமல் தரையில் படுத்து அப்படியே கொஞ்சம் டீயை உறிஞ்சி விட்டு, கையிலலெடுக்கும் அளவு வந்தவுடன் பிறகு எடுத்து குடித்திருக்கிறேன். இதைப் பார்த்து தலலயால் அடித்துக் கொண்டு கோபம் போய் சிரிப்பார்கள்.

இவையெல்லாம் எனக்கு விவரம் தெரியாத வயசுல நான் செஞ்ச லொள்ளூஸ். மற்றபடி சில குழந்தைகளைப் போல எல்லாப் பக்கமும் ஓடி, சில பொருட்களை உடைத்துவிடுவது, அதிகமா குப்பை போடுறது போன்ற தீவிரவாதச் செயல்கள் எல்லாம் செய்ததில்லை. ஏதாவது ஒரு பக்கம் உக்காந்துகிட்டு எதையாவது யோசனையோடுதான் இருப்பேன்.
(அப்பவே உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சிட்டம்ல)

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

 

காமெடி வியாழன்

-நாமக்கல் சிபி -
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட இளா, தேவ், ஜொள்ளுப்பாண்டி ஆகியோர் புடைசூழ கம்பீரமாக ஆலோசனைக் கூடத்தினுள் நுழைகிறார் கைப்புள்ளை.

நாகை சிவா: "சங்கம் கண்ட மன்னன், சங்கத்து சிங்கங்களுக்கெல்லாம் அண்ணன், மாவீரன் டெலக்ஸ் பாண்டி....வருகிறார் பராக்...பராக்..."

கைப்புள்ளை: "இரு இரு.... அதான் வந்துட்டம்ல....எதுக்கு இப்படி ஒரேயடியா ஃபீல் பண்ணி கூவுற! யோவ் தேவு, கூட்டப்போறது ரகசியக் கூட்டம்னு தெரியும்ல..எதுக்கு இப்படியொரு பில்டப்பு!.."

நாகை சிவா: "ஹி..ஹி..தலை பழகிடுச்சு தலை...!"

கைப்புள்ளை : "ம்ஹூம், தேவையான நேரத்துல ஒரு பயலும் கண்டுக்காதீங்க.. எப்ப தேவையில்லயோ அப்பப் பார்த்து பிட்டா போடுவீங்க..."

தேவ் : " அட அதை விடுங்க தலை... வந்த வேலையைப் பார்ப்போம் முதல்ல"

கைப்புள்ளை: "ஆங்க்.. சரி.. நாம இப்போ இங்கே எதுக்குக் கூட்டியிருக்கோம்னா..."

இளா : "என்ன கூட்டியிருக்கோம்னா"

கைப்புள்ளை: " அதாவது இந்த ரகசியக் கூட்டத்தை எதுக்குக் கூட்டியிருக்கோம்னா..."

இளா: "என்னா ரகசியக் கூட்டம் கூட்டியிருக்கோம்னா"

கைப்புள்ளை: "ஏம்பா! இளா என் கிட்டயேவா! இல்லை என்கிட்டயேவான்னு கேக்குறேன்..
கண்ணுங்களா... இப்பவே எனக்குக் கண்ணைக் கட்டுதே....கொஞ்சம் சொல்ல விடுங்கப்பா..
தேவு! நாஞ்சொல்லுறது சரிதான"

தேவ்: "என்னா சொல்லுறது சரிதான.."

கைப்புள்ளை: "ஆஹா கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா..."
சட்டென்று கோபமாகி
"சே! என்ன இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு! ராஸ்கல்ஸ்..என்னை சொல்ல விடுவீங்களா மாட்டீங்களா?"

நாகை சிவா: "என்ன சின்னப்......."
கைப்புள்ளை திரும்பிப்பார்க்கவும்...."ஸாரி தலை.."

கைப்புள்ளை: ஆள் காட்டி விரலை தன்னை நோக்கி வைத்தவாறே "இது தேவையா, இது தேவையா... எனக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும்"

அதற்குள் "என்னது இன்னும் வேணுமா?" என்று பார்த்திபனின் குரல் கைப்புள்ளைக்கு மட்டும் கேட்க....

கைப்புள்ளை: "வந்துட்டான்யா..இங்கயும் வந்துட்டான்யா...வாயப் புடுங்க இங்கயும் வந்துட்டான்யா"

பாண்டி: "தலை, யாரு வந்துட்டாங்க?, இங்க நம்மளைத்தவிர வேற யாரும் இல்லையே!"

கைப்புள்ளை: "இல்லை பாண்டி, இப்போ பார்த்திபனோட சத்தம் கேட்டுதே?"

பாண்டி: "தலை, ரிலாக்ஸாவுங்க.. இங்கயாவது பார்த்திபன் வர்றதாவது.. எல்லாம் மனப் பிராந்தி"

கைப்புள்ளை: "என்ன சொன்னே.. மனப் பிராந்தியா..? ஏன் பிரம்மைன்னு சொல்லுறது.. அதை விட்டுட்டு இப்போ ஏன் பிராந்தி, ரம்முன்னெல்லாம் சொல்லுறே.. அங்க பாரு பிராந்தின்னவுடனே இளா எல்லாத்தையும் மறந்துட்டு எங்கயோ யோசிக்கிறதை..."

"யோவ் இளா... இங்க பாருய்யா... என்னா எல்லாரும் இன்னிக்கு ஓவராப் போறீங்க, பேசி வெச்சிகிட்டு கலாய்க்கறீங்களா? எல்லாரையும் சஸ்பென்ஸ் செஞ்சிடுவேன்..ராஸ்கல்ஸ்.. ஆமா கலாய்த்தல்னவுடன்தான் ஞாபகத்துக்கு வருது, அந்த நாமக்கல் சிபி என்ன இன்னமும் காணோம்"

தேவ்: "தலை, தளபதியார் எப்பவுமே கொஞ்சம் லேட்டாத்தான் வருவாரு, ஆனா லேட்டஸ்டா வருவாரு, ...இப்ப வந்துடுவாரு....அட..அதோ வர்றார் பாருங்க"

அதற்கும் நாமக்கல் சிபி.. தப தபவென மூச்சிரைக்க "தலை...தலை.." என்று கத்தியவேறே ஓடிவருகிறார். அவரைத்தொடர்ந்து பின்னாலேயே இன்னும் நாற்பது ஐம்பது பேர் ஓடிவருகின்றனர்.

கைப்புள்ளை: "யோவ் சிபி, என்னய்யா அச்சு ஏன் இப்படி ஓடி வர்றே..?"
எண்று முழுசாய்க் கேட்டு முடிப்பதற்குள் பின்னால் ஒடிவந்த அந்த கூட்டம் கைப்புள்ளையைச் சுற்றி வளைத்து, ஒரு அரை மணி நேரம் குமுறு குமுறென்று குமுற்கின்றனர்,

ஒரு வழியாய் அவர்கள் அடித்து களைத்தபின் குமுறுதலை முடித்துக் கொள்ள, பரிதாபமாய் எழுத்து நின்று ஒன்றும் புரியாமல் விழிக்கும் கைப்புள்ளையிடம்

"இனிமேல் இப்படியெல்லாம் கேட்டே நடக்குறதே வேற? கேள்வி கேக்குறானாம் கேள்வி? கையை ஒடச்சிடுவோம்..ஆமா?"
என்று எச்சரித்துவிட்டு அனைவரும் வெளியேற்கின்றனர்.

கதிகலங்கிப்போயிருக்கும் கைப்புள்ளை அப்படியே சுற்றிலும் ஒரு நோட்டம் விட ஆங்காங்கே பீரோவுக்குள், பெஞ்சு, மேசைக்கடியில் ஒளிந்து கொண்டிருந்த சங்கத்து சிங்கங்கள் எல்லாரும் ஒவ்வொருவராக வெளியில் வருகின்றனர்.


கைப்புள்ளை: "அம்ம...அம்ம..." என்றவாரே நிமிர்ந்து அனைவரையும் ஒரு முறை முறைத்துவிட்டு

"யோவ் சிபி என்னய்யா நடக்குது இங்கே, யாரு இவிங்கெலாம், எதுக்கு வந்தாங்க, அடிப் பின்னியெடுத்தாங்க, போயிட்டே இருக்காங்க? ராசா சிபி! சொல்லுப்பா, ஐய்யோ உடம்பை ரணகளமாக்கிட்டாங்களே..ரணகளமாக்கிட்டாங்களே"

இளா: "இவெங்க எல்லாரும் வலைப்பதிவர்கள்தான்..நிறையப் பேரை நமக்கு முன்னாடியே தெரியும்"

கைப்புள்ளை: :"வலைப்பதிவர்களா... அவங்களுக்கேன் என் மேல இப்படியொரு கொலைவெறி?"

சிபி: "ஹி..ஹி.. அது ஒண்ணும் இல்லை தலை! அங்கங்கே பின்னூட்டங்கள் மூலமா கொஞ்சம் குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்டு வெச்சேன்.. அதுலதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாங்கன்னு நினைக்கறேன்"

கைப்புள்ளை: "குண்டக்க மண்டக்காவா..என்ன நீயும் பார்த்திபன் மாதிரி ஆயிட்டே...அப்புறம் ஏன் டென்ஷன் ஆவ மாட்டாங்க... ஆமா நீ கேட்டக்காக என்னை ஏன் ராசா தேடி வந்து அடிக்கணும்?"

பெருசு:"அதை நான் சொல்லுறேன் தலை. தளபதி எல்லா இடத்திலயும் போய் தான் கேட்டதா அந்த கேள்விகளைக் கேக்கலை, நீங்க கேட்டதாத்தான் கேட்டுகிட்டிருந்திருக்காரு"

கைப்புள்ளை:"ஓ! அதானா சங்கதி.. யோவ்..சிபி நீ நல்லா இருப்பய்யா...நீ எந்த ரேஞ்சில கேட்டு வெச்சேன்னு எனக்கு நல்லா புரியுது..ஆமா வந்த அத்தனை பேருமே அடிக்கலை போல இருக்கே.. கொஞ்சம் பேரு தனியா நின்னுகிட்டு "ஆங்க் அப்படித்தான், நல்லா உதை.. அங்க மிதி..சூப்பர்னெல்லாம்" சத்தம் போட்டுகிட்டு இருந்தாங்களே அவுங்கள்ளாம் யாரு?"


இளா: "தலை அவுங்கள்ளாம் அப்ரெண்டிசுங்க அதாவது எழுத நிறைய திறமை இருக்கும், ஆனா பிளாக்கர் ஐடி கிரியேட் பண்ண டைம் இருக்காது, எந்த வம்பு தும்புக்கும் போவாதவங்க, எங்கயாச்சும் இப்படி ஒண்ணு நடந்ததுனா கூடி நின்னு வேடிக்கை பார்ப்பாங்க, அவ்வளவுதான்"

கைப்புள்ளை: "ஆஹா! இப்படி வேற ஒரு குரூப் கெளம்பி இருக்காங்காளா? அது போகட்டும் சிபி.. நாம ரகசியக் கூட்டம் நடத்துற இடம்தான் யாருக்குமே தெரியாதே? எப்படி இவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்சி வந்தாங்க?"

சிபி: "அதான் தலை நானும் யோசிக்கிறேன், நானும் அவங்க விரட்டும்போது திரும்பி திரும்பி பார்த்துகிட்டேதான் வந்தேன், எப்படி கரெக்டா வழி தெரிஞ்சி துரத்துறாங்கன்னு?"

கைப்புள்ளை: "வழி தெரியாத ஆளுங்களையும் கூடவே கூட்டிட்டு வந்துட்டு யோசிக்கறாராம்ல... சரி சரி.. நாளைக்கே வேற இடம் பார்க்கணும்.. இளா, தேவ், வேற இடம் பார்த்து அப்புறமா கூட்டத்தைக் கூட்டுவோம்"

இளா: "தலை, இவ்ளோ நடந்திருக்கு, உங்களுக்கு வலிக்கவே இல்லையா..?"

கைப்புள்ளை::ஹெ.ஹெ.. நமக்கெல்லான் என்னிக்கு வலிச்சிருக்கு"

அப்போது நன்மனம் அங்கே மூச்சிரைக்க ஓடிவருகிறார்.
"தலை..தலை.. உங்களை அடிக்க வலைப்பதிவர்கள்..எல்லாரும் ஒண்ணு சேர்ந்து வந்துகிட்டிருக்காங்களாம்..."

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

 

காதல் செவ்வாய்! - 1

-பிதற்றல்கள் வலைப்பூ-
காதல் - என்ற வார்த்தையை சொல்லும்போதே நமக்கெல்லாம் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுது இயற்கையாவே. அதனாலதானோ என்னவோ நாம சினிமாவுல அல்லது சீரியலில் பார்க்குற காதல் ஜோடி கூட நல்லபடியா சேரணும்னு நமக்குள்ள ஒரு பதை பதைப்பு வந்துடுது. அந்த காலத்துல இந்த காதலுக்கு தடையா இருந்தது மதம், ஜாதி, மொழி இதெல்லாம். ஆனா இப்ப காலம் மாறிப் போயிடுச்சு. இதெல்லாம் கூட பெரிய அளவுல தடையா இருப்பதில்லை. வெறும் கௌரவமும், அந்தஸ்தும், காசு பணமும்தான். பெத்த பொண்ணு நல்ல படியா வாழணும்னு பெத்தவங்க நினைக்கறதும் ஒரு பக்கம் நியாயம்தான். அதே சமயம் வறட்டுப் பிடிவாதத்துக்காக பொண்ணோட/பையனோட சம்மதம் இல்லாமயே வேற பையனுக்கு/பொண்ணோட கல்யாணம் பண்ணி வெச்சி காலம் பூராவும் வெளிப்படையா கண்ணீர் விட்டு அழவும் முடியாம, சந்தோஷமா வாழவும் முடியாம...போறவங்களோட வாழ்க்கையை கொஞ்சம் நினைச்சிப் பாருங்க...

டீ.ஆரோட "மைதிலி என்னைக் காதலி" படத்துல ஒரு பாட்டு வரும் பாருங்க.
"தண்ணீரிலே மீனழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்.."

டீ.ஆரோட எல்லாப் படங்களிலுமே பார்த்தீங்கன்னா ஏதாவது ஒரு காதல் தோல்வியைச் சொல்லியிருப்பார். எனக்குத் தெரிஞ்சி காதல் தோல்வியோட வலி என்னன்னு திரைப் படங்களில் அதிகமா பதிவு செஞ்சவர் அவராத்தான் இருக்கும்.

தன்னோட ஒரு தலைக் காதல் ஏற்கப்படாமல் போனபோது "மைதிலி என்னைக் காதலி" படத்துல ஒரு பாட்டோட தொகையறாவுல பாடுவார் பாருங்க.

"காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே....
கண்ணீரை மருந்தாக்குங்களே...
கண்ணீரை மருந்தாக்குங்களே..."
அந்த மூன்று வரிகளைக் கேட்டாலே போதும். அந்த வலி நம்ம மனசுலயும் வந்து உக்காந்துடும்.

ரொம்ப நாளா ஆசை வெச்சிருந்த தன்னோட முறைப் பொண்ணு, இன்னொருத்தரை விரும்பறான்னு தெரிஞ்சவுடனே, தன்னோட ஒரு தலைக் காதல் கானல் நீராயுடுச்சேன்னு அந்தப் பாட்டுல என்னமா சொல்லுவார் பாருங்க.

"சமைச்சி வெச்ச மீனுக் குழம்பை
நீயும் சளைக்காம தின்னபோது
தாலி கட்ட நினைச்சிருப்பே
நீயும் தாரமாக்கத் துடிச்சிருப்பே..
அன்று கையைதான கழுவு என்றாள்
இன்று காதலில்லை அழுவு என்றாள்"

டீ.ஆர் இப்படி பாடுறதைக் கேட்டு பக்கத்து வீட்டு ஊமை வாட்ச் மேன் தேம்பி தேம்பி அழுவான். பாவம் அவனுக்குள்ளயும், அந்த ஊமை மனசுக்குள்ளயும் ஒரு காதல் தோல்வி இருந்ததே அப்பதான் தெரியவரும்.

ஒரு பக்கம் தன்னோட ஒரு தலைக் காதல் தோல்வியில் முடிய இன்னொரு பக்கம் தன்னை விரும்புற இன்னொரு பெண்ணோட காதலை ஏத்துக்க முடியாம தவிக்கும் தவிப்பை பாட்டுலயே நல்லா சொல்வார்.

"அமாவாசை இரவினிலே நிலவது உதிப்பதில்லை..
அழகற்ற என் முகத்தை அன்றொருத்தி ஏற்க வில்லை..."


அதே மாதிரி ஒரு தாயின் சபதம் படத்துல டீ.ஆரும், அவருடைய நண்பரின் தங்கையும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் அதை வெளியில் சொல்லிக்காமலேயெ இருப்பாங்க. அதுக்குள்ள விதி செய்த சதியால், இவங்க காதலைப் பத்தி தெரியாத பெரியவங்க அந்தப் பொண்ணுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சி வைக்க
அந்த பாழும் மனசுங்க ரெண்டும் கிடந்து தவியாய் தவிக்கும் பாருங்க..

அப்பதான் டீ.ஆர் பாடுவாரு...

"அட காதலிச்சா போதாது
அதை மூடி வைக்கக் கூடாது
கல்யாணம்தான் சொர்க்கத்துல
நிச்சயிக்கப் படுதாம்
பத்திரிக்கை மட்டும் இங்கே
அச்சடிக்கப் படுதாம்..

சம்மதம் கேக்காமலே
சம்மந்தம் பேசுறாங்க...
இரு மனங்களைப் பார்க்காமலே
திருமணங்களைச் செய்யுறாங்க.."

இதென்ன கலாட்டா, காதல் பற்றி சுவாரசியமான ஜாலியான விஷயம் ஏதாவது சொல்லுவேன்னு பார்த்தால் இப்படி காதல் தோல்வியோட சோகத்தை சொல்றேன்னு பார்க்கறீங்களா, ஆமாங்க! அடுத்து நான் சொல்லப்போறதும் ஒரு சொல்லாத காதலோட வலியைத்தான்.

அனுப்பியவர் Admin

1 கருத்துக்கள்

 

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2006)
 
[பாவனை செய்யபĮ