www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

ஆரூடம் அறிவியல் ஆகின்றது!-அதிர்ச்சி 'நகைச்சுவை' கட்டுரை

யோசித்துப் பாருங்கள் இந்தியாவில் எந்த மரபுவழிப்பட்ட சேவையாவது இவ்வளவு தூரம் நம் வாழ்க்கையோடு பிணைந்துள்ளதா? குக்கிராமங்களிலிருந்து பிரதமர் அலுவலகம் வரை பயன்படும் ஒரே 'அறிவியல்' ஆரூடம் தானே?
இன்னும் சில வருடங்கள் கழித்து ''ஜோஸ்யம்...கிளி ஜோசியம்'' என்று தெருவில் யாரேனும் கத்திக் கொண்டு சென்றால் ஆச்சரியப்படுவீர்கள். டாக்டர்கள், என்ஜினியர்கள் போன்று 'அப்பாயின்மென்ட்' வாங்கி ஜோசியம் பார்க்க வேண்டிய நிலை அப்போது வந்திருக்கும்.

இப்போதே சில வி.ஐ.பி. ஜோசியர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். இருந்தாலும் இவர்களது பெயருக்கு பின்னால் இந்தத்துறைக்கான ஒரு டிகிரியோ டாக்டர் பட்டமோ போட்டுக் கொண்டால் இவர்களது நம்பகத்தன்மை எந்த அளவு உயர்ந்திருக்கும்? கவலையை விடுங்கள்; இக்குறை விரைவில் நீங்கி விடும்.

ஆருடத்திற்கு என்று தனியாக ஒரு பட்டப்படிப்பை துவங்க பல்கலைக்கழக மான்யக் குழு பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாம். ஆரூடம் ஒரு கலையா? அறிவியல் அல்லது பரம்பரைத் தொழிலா? என்று இனி தீவிரமாகச் சிந்திக்க வேண்டாம்.

அது 'அதிகாரப்பூர்வ' அறிவியல்தான் என அடித்துச் சொல்ல வேண்டியிருக்கும். எதிர் வீட்டிற்கு போவதற்குகூட சகுனம் பார்க்கும் நமது 'உயர்ந்த' மரபு, இனி அறிவியல் ரீதியில் இன்னும் உச்சத்துக்கு செல்லலாம்.

இதனால் சமூகத்திற்கு என்னென்ன நன்மைகள், தீமைகள்? முதலில் அரசியல்வாதிகள் கோயில், கோயிலாக படியேறி தோஷம் நீங்க யாகம் நடத்த வேண்டாம். மான், புலி போன்ற 'அப்பாவி' ஜீவன்கள் இவர்களின் அதிகாரப் பசிக்கு இரையாக வேண்டாம். மேலும், எந்த நேரத்தில் தேர்தல் நடத்தினால் அமைதியாக நடக்கும் என்று தேர்தல் கமிஷனுக்கு முன்பாக தெரிந்தால், அதற்கும் 'டென்ஷன்' குறையும். இதேபோல, விளையாட்டு (முக்கியமாக கிரிக்கெட்), போக்குவரத்து (முக்கியமாக விமானங்கள்) அடுத்து கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறுவதற்கு அரசு வேலையில் சேர, தொழில் தொடங்க லஞ்சம் வாங்க, ஊழல் செய்ய, செய்தபின் (மாட்டிக் கொள்ளாமல் இருக்க) போன்று 'இன்னபிற' வேலைகளில் ஈடுபட சரியான நேரம் காலம் குறித்துக் கொண்டு செயல்பட்டால் நல்லதுதானே!

விளையாட்டுகளில் (கிரிக்கெட் என்று படிக்கவும்) இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருந்தால் விளையாடலாம்; இல்லையேல் பந்தயத்தொடரையே ரத்து செய்து விடலாம். விமானங்கள் பத்திரமாக போய்ச் சேர நேரம் குறிக்கும் ஆருட ஆலோசகர் பதவியை எல்லா ஏர்லைன்ஸ்களும் ஏற்படுத்தி விட்டால் பிரச்னை தீரும்(!?) காப்பீடு நிறுவனங்களின் 'அதிகாரப்பூர்வ' ஆருடக்காரர்கள், பாலிசிதாரரின் உண்மையான ஆயுளை அறிந்து சொல்லிவிட்டால் (ரகசியமாக), அதற்கேற்ப பேரம் பேசி வாடிக்கையாளர்களைத் தவிர்த்து விடலாம். குறைவாக பீரிமியம் பெற்றுக்கொண்டு, நிறைய பணம் கொடுப்பதற்கு அவர்களுக்கு என்ன பைத்தியமா?

அதைக்கூட விடுங்கள் 'பேஷண்ட்' பிழைப்பாரா மாட்டாரா எனத் தெரிந்து கொண்டு டாக்டர்கள் வைத்தியம் செய்யலாம் (இல்லாவிட்டால் கன்ஸ்யூமர் கோர்ட்டிற்கு போயாக வேண்டுமே!) வக்கீல்கள் நீதிபதிகளின் கட்சிக்காரரின் கிரகநிலை அறிந்து 'கேஸ்களை' எடுத்துக் கொள்ளலாம். (எதிர்பாராத தீர்ப்பு வராமலிருக்க!) அப்புறம் குழந்தைகள், கல்வி, விஷயம்! தொழில் கல்வி, அல்லது ஐ.ஏ.எஸ். வரை நிச்சயம் படிக்கும் என்றால் கான்வென்ட் ஸ்கூல்; இல்லையேல் இருக்கவே இருக்கிறது. கார்ப்பரேஷன், ஸ்கூல்! எப்படி?

அது சரி, குற்றம் செய்பவர்களும் இதைப் பயன்படுத்துவார்களே! அதை எப்படித் தடுப்பது? அதெற்கெல்லாம் பார்த்தால் முடியுமா? ஆரூடத்திற்கு அறிவியல் அந்தஸ்து என்றால் சும்மாவா? நாளைக்கு 'ராக்கெட்' விடுவதுகூட இவர்களைக் கேட்டுத்தானே நடக்கும்!

யோசித்துப் பாருங்கள் இந்தியாவில் எந்த மரபுவழிப்பட்ட சேவையாவது இவ்வளவு தூரம் நம் வாழ்க்கையோடு பிணைந்துள்ளதா? குக்கிராமங்களிலிருந்து பிரதமர் அலுவலகம் வரை பயன்படும் ஒரே 'அறிவியல்' ஆரூடம் தானே? அதுமட்டுமா? மத்திய அரசின் இந்த முயற்சியால் வேலைவாய்ப்பு பெறுவார்கள். (சுயவேலை வாய்ப்பு உட்பட...எக்கச்சக்க பணியிடம் உருவாகும்!). இதுவும் ஒரு வருமானம் கொழிக்கும் தொழில் என்பதால் தனியாரும் இதைக் கற்பிக்க, கல்லூரிகள் ஆரம்பிக்க முன்வருவார்களே! இதற்கு கிடைக்கக் கூடிய உள்ளூர் சந்தை மட்டும் குறைந்தபட்சம் எத்தனை கோடி வரை போகும்.

அதன்பிறகு இன்போஸிஸ் நாராயண மூர்த்தியும், WIPRO பிரேம்ஜியும் பணக்கார பட்டியலில் இருந்து கீழிறங்கியிருப்பார்கள் பாவம்! யார், யார் இந்த இடத்தை நிரப்புவார்களோ? அதற்கும்கூட ஆருடம் பார்க்கலாமே! கொஞ்சம் பொறுமையாக இருந்து பாருங்கள் இதெல்லாம் நடந்தாலும் நடக்கும்!

அது போகட்டும். இதுபோன்ற அறிவியல் புரட்சிகளுக்கு மூலகாரணகர்த்தா யார் என்றால், வேறு யார்? நமது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷிதான். ஒரே ஒரு கையெழுத்தில் எல்லோரது தலையெழுத்தையும் மாற்றிவிட முனையும் 'பிரம்மா'? ''நேரமும், இடமும் மனிதனின் சக்திக்கு மீறியவை. அவற்றை அளக்க முடியாது'' என்றால் 'ஏன் முடியாது'? அதுவும் முடியும். அதை ஆராயாமல் சொல்லக் கூடாது என்றால் என்ன செய்வது? இனி பழைய கால நூல்களுக்கு, ஓலைச்சுவடிகளுக்கு வந்தது கிராக்கி!

மடங்களில் சொல்லித்தர வேண்டியவற்றை, கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கலாமா? என்று அமைச்சகத்தில் கேட்டால், ''மெக்காலே பிள்ளைகள் வாயை மூடிக் கொண்டு போங்கள்'' என்கிறார்கள். எனவே இதே போக்கில் பில்லி சூன்யம், ஆவிகளோடு பேசுதல், மறுஜென்ம ஆராய்ச்சி, என்றெல்லாம் பட்டப்படிப்பு வந்தால் ஆச்சர்யப்பட வேண்டாம். இவையெல்லாம் டி.வி. சீரியல்களில் முழுமையாக காட்டப் பெற்றுள்ளதால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அறிவியல் ரீதியாக இவற்றை விளக்கி விட்டால் போச்சு! எதற்கும் இன்டர்நெட்டில் இது பற்றிய சமீபத்திய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் இந்தப் போட்டியில் பின்தங்கி விடுவார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

-ரமேஷ் பாபு
நன்றி அம்பலம்.கொம்

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]