www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

வி.ஐ.பி.க்கள் கேட்ட சினிமா கதை! -ஜி.எஸ்.சுப்ரமணியன்

நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு சோகத்துடன் இருந்த ஜெயலலிதாவிடம் அப்பாவி அழகுசாமி கூறத் தொடங்கிய கதை ''முதல்வன்''. ''ஒரே, ஒரு நாள் சம்பளம் போதும்! சேச்சே! ஒரே.... ஒரு நாள் முதல்வரா இருந்தால் போதும். ஊழல்களை எல்லாம் ஒழிச்சி, தப்பு செய்யறவங்களை கம்பியெண்ண வைச்சிடறதா சபதம் போட்ட அர்ஜுன் அப்படியே செய்து காண்பிக்கிறார்.

தீபாவளிக்கு வரிசையா நிறைய படங்கள் ரிலிஸானாலும் வி.ஐ.பி.க்களுக்கு சினிமா பார்க்க நேரமிருக்குமா? இதை நினைத்தபோது அப்பாவி அழகுசாமிக்குப் பாவமாக இருந்தது. தீபாவளிப் படங்களை தானும் பார்க்கவில்லை என்றாலும் ஏற்கெனவே வந்த சில படங்கள் பற்றியாவது வி.ஐ.பி.களுக்கு சொல்லி வைக்கணும். தான் பார்த்த அண்மைய திரைப்படங்களின் கதையையோ அல்லது குறைந்தது அதில் வரும் சில காட்சியையோ அவர்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு அவனுக்கு. ஆனால் வி.ஐ.பி.க்களை சந்தித்துப் பேச இவனுக்கு வாய்ப்பு ஏது? இந்த ஏக்கத்தோட படுத்துத் தூங்கிப் போனான். என்ன ஆச்சர்யம்? அவர்களே ஒவ்வொருவராக அவன் கனவில் வந்து கதை கேட்கத் தொடங்கினார்கள்.

இனி கனவுக் காட்சிகள் கவனிக்க: சினிமா காட்சிகள் அல்ல.

மதுரையிலிருந்து வந்திருந்த மு.க.அழகிரியைப் பார்த்து, யதார்த்தமாகத்தான் கேட்டான் அப்பாவி அழகுசாமி. ''என்னங்க, பஸ்லயா வந்தீங்க? ஜாக்கிரதையா வந்து சேர்ந்தீங்களா?'' வந்தவரின் முகம் சற்றே சுருங்குவதை கவனிக்காமல், 'அத விடுங்க!', என உயிரிலே கலந்தது திரைப்படத்தின் கதையைச் சொல்லத் தொடங்கினான். ''ரகுவரனும், சூர்யாவும் அண்ணன் தம்பிங்க! இதிலே பாருங்க! பெத்தவங்க, சின்னவனை ரொம்ப செல்லம் கொடுத்து வளக்கிறாங்க. பெரியவனுக்கு இதனாலே ரொம்ப கோவம். மனசுல நிறைய வஞ்சத்தை வளர்த்துக்கறான்.''

அழகுசாமிக்கு கதை சொல்வதில் இருந்த ஆர்வம், நிஜம், யதார்த்தத்தை புரிந்து கொள்வதில் இல்லை. அழகுசாமி தொடர்ந்து கொண்டிருக்கும்போதே அழகிரியின் கண்கள் சிவப்பது கூட தெரியவில்லை. அது கோபமா வருத்தமா என்றும் புரியவில்லை. அந்த இடத்தை விட்டு எழுந்து வேகமாக நகர்ந்து விட்டார் அழகிரி.

அடுத்து நம்ம ஆளின் கண்களில் தென்பட்டது ப.சிதம்பரம். குஷியாக 'குஷி' படக் கதையை எடுத்துவிடத் தொடங்கினான் அப்பாவி அழகுசாமி. ''ஹீரோ விஜய் 'றெக்க கட்டி பறக்கற சைக்கிள்' கணக்கா கொஞ்சம் வேகமான, சுறுசுறுப்பான ஆளு. ஹீரோயின் ஜோதிகாவோ தாமரைப்பூ மாதிரி. ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் விரும்புற மாதிரியிருக்கு. ஆனா அதை வெளிப்படையா சொல்லிக்காம கண்ணாமூச்சி காட்டறாங்க! இன்டர்வெல தாண்டியும் கதை இப்படியே இழுக்குது! இந்த விஷயம் மத்தவங்களுக்குத் தெரிஞ்சா என்னவாறது?'' ஆர்வக் கோளாறு அழகுசாமி இப்படியே தொடர்ந்தான்.

பொறுப்பற்ற கதை. இதற்கெல்லாம் காரைக்குடியில் நடந்த சிறை நிரப்பு போராட்ட மறியலிலேயே பதில் சொல்லிவிட்டேன்''என்று கூறிவிட்டு விடுவிடுவென்று சிதம்பரம் நகர, நம்மாள் திகைத்துப் போனார். இதற்குள் ஊர் சுற்றி... சாரி! தமிழக சுற்றுப் பயணம் வந்த மம்தா பானர்ஜியைப் பார்த்ததும் அப்பாவி அழகுசாமிக்கு ஆர்வம் அதிகமானது. வேற்று மாநிலப் பெண்மணி என்பதால் ஒரு சூப்பர் தமிழ்ப்படக் கதையைச் சொல்லி அசத்திவிட வேண்டுமென்று நினைத்தான். 'சூப்பர் கதை' என்றவுடன் 'சூப்பர் ஸ்டார் படம்' நினைவுக்கு வர 'படையப்பா'வை எடுத்துவிட ஆரம்பித்தான்.

'நீலாம்பரின்னு ஒரு கேரக்டர். ரம்யா கிருஷ்ணன் நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு ரஜினியோடு குடும்பக் கூட்டணி வச்சுக்கணும்னு ஆசை. ஆனால் அதேசமயம், ரொம்பத் தழைஞ்சு போகவும், ஆணவம் இடம் கொடுக்கலே. அப்பப்போ ரஜினியை சேலன்ச் பண்றாங்க. உதார் காட்டறாங்க'' என்று அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே ''என்ன தப்பு? ஒரு பெண்ணுன்னா அவ்வளவு இளப்பமா? ஜோதிபாசு அரசை பதவி இறக்கும்வரை.... அதாவது, காஸ் விலையைக் குறைக்கும் வரை... நான் மத்திய அரசை மிரட்டத்தான் செய்வேன்'' என்று சீறியபடி அங்கிருந்து வேகமாக நகர்ந்தார் மம்தா.

அடுத்து எதிரில் வந்தவர் டாக்டர் ராம்தாஸ். ''அய்யா நீங்களாவது கதையை முழுசா கேளுங்க. 'ரிதம்'ன்ற படத்தின் கதை. மீனா விதவைப் பெண். அர்ஜுனை விரும்பறாங்க. அவரும்தான். ஆனால் கல்யாணம் செய்து கொள்ள நிச்சயிக்கும்போது மீனாவுடைய பழைய மாமியார் லட்சுமி, (இறந்து போன ரமேஷ் அரவிந்தன் அம்மா) வந்து நிக்கறாங்க. இந்த நிலையில் எந்த முடிவைத் தேர்ந்தெடுப்பதுன்றதிலே ரொம்ப சங்கடப்படறாங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதையை அரைகுறையாகக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் ''இதிலென்ன சங்கடம்? யார் பக்கம் போனா அதிக லாபமோ அந்தப் பக்கம் போக வேண்டியதுதானே?'' என்றபடி நடையைக் கட்டினார்.

நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு சோகத்துடன் இருந்த ஜெயலலிதாவிடம் அப்பாவி அழகுசாமி கூறத் தொடங்கிய கதை ''முதல்வன்''. ''ஒரே, ஒரு நாள் சம்பளம்! போதும்! சேச்சே! ஒரே.... ஒரு நாள் முதல்வரா இருந்தால் போதும். ஊழல்களை எல்லாம் ஒழிச்சி, தப்பு செய்யறவங்களை கம்பியெண்ண வைச்சிடறதா சபதம் போட்ட அர்ஜுன் அப்படியே செய்து காண்பிக்கிறார். அதிலே ஒரு சீன்ல மேடம்'' என்று தொடங்கியவர், கடும் கோபத்தோடு முன்னாள் முதல்வர் இருப்பதைக் கவனித்து விட்டான். காரணம் புரிந்தோ, புரியாமலோ அழகுசாமி அங்கிருந்து நழுவி, உள்ளே போன உருவத்தோடே, காயமில்லாமல் திரும்பி விட்டான்.

எந்த வி.ஜ.பி.யுமே தான் சொல்லும் சினிமாக் கதையை முழுவதுமாக கேட்க மாட்டேன் என்கிறார்களே என்று.... ஏங்கிப் போனாலும் நம்ம ஆள், விக்ரமாதித்தன் கணக்கில் தன் முயற்சியில் சற்றும் தளரவில்லை. இன்னும் கூட கைவசம் கொஞ்சம் கதை ஸ்டாக்கை வைத்திருப்பதைச் சுமந்து கொண்டு நடந்தான். வைரமுத்துவை சந்திக்கும்போது காக்கா பிடிக்காத, நெஞ்சு நிமிர்த்திய கவிஞன் பாரதியின் கதையைச் சொல்லப் போகிறாராம். அப்புறம் கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் என்ற கேரக்டரில் மன்சூர் அலிகான் சந்தனத்தைக் கடத்த, போலீஸ் அப்படியே சூழ்ந்து கொண்டு அவனை லபக் என்று பிடிக்கும் காட்சியை யாராவது ஒரு போலீஸ் வி.ஜ.பி.யிடம் சொல்ல வேண்டுமாம். இல்லைன்னா, ''யார்கிட்டே அய்யா சொல்லுறது? மீசைக்கார நக்கீரன் அண்ணாச்சிகிட்டயா? அல்லது காட்டிலே இருக்கிற வீரப்பனிடமா அல்லது கன்னட சூப்பர் ஸ்டாரிடமா?'' குழப்பத்தில் இருக்கிறான் அழகுசாமி!

யாரிடம் சொல்வது? நீங்கள்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்!

நன்றி அம்பலம்.கொம்

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]