|
உங்களுக்கு உப ஜனாதிபதியா இருக்கப் போறது யாரு? டிக் சென்னிதானே.
அவரை டிக் சென்னினு கூப்பிடக் கூடாது. சென்னியார்னு சொல்லனும்.
இன்னும் ஐஸ் வைக்கனும்னா மானமிகு, கோனமிகுனு ஏதாவது பட்டம்
சேத்துக்கலாம். ஆளு நம்மளை விட்டுப் போகமாட்டார்.
அமெரிக்க அரசியலும் கிட்டத்தட்ட தமிழக அரசியல் போல் ஆகிவிட்டது.
பதவி ஏற்க இன்னும் பத்து நாட்களே இருக்கும் நேரத்தில் நம்ம ஊர்
அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை கேட்க வருகிறார் புதிய அதிபர்
ஜார்ஜ் புஷ்.
தமிழக முதல்வர் கருணாநிதி.
கலைஞர்: வணக்கம் தம்பி, வாங்க.
புஷ்: வணக்கம் சார். அரசியல் பத்தி உங்கக்கிட்ட ஆலோசனை
கேக்கலாம்னு வந்தேன்.
கலைஞர்: நல்லது. முதல்ல இப்படி சார்லாம் போடக்கூடாது. அண்ணன்னு
சொல்லனும். இல்லாட்டி ஏதாவது பட்டப் பெயர் வச்சுக் கூப்பிடனும்.
புஷ்: எப்படி?
கலைஞர்: உங்களுக்கு உப ஜனாதிபதியா இருக்கப் போறது யாரு? டிக்
சென்னிதானே. அவரை டிக் சென்னினு கூப்பிடக் கூடாது. சென்னியார்னு
சொல்லனும். இன்னும் ஐஸ் வைக்கனும்னா மானமிகு, கோனமிகுனு ஏதாவது
பட்டம் சேத்துக்கலாம். ஆளு நம்மளை விட்டுப் போகமாட்டார்.
புஷ்: அப்புறம் சார்,
கலைஞர்: பாருங்க மறுபடியும் சார் போடறீங்க. உங்களுக்குக் கடிதம்
எழுதத் தெரியுமா?
புஷ்: எல்லாம் ஈ மெயில்தான்.
கலைஞர்: ஈ மெயில் கொசு மெயில்லாம் அரசியலுக்கு ஒத்து வராது.
தம்பிக்கு லெட்டர் எழுதனும்.
புஷ்: தம்பிக்கா, எனக்கு தம்பியே கிடையாதே.
கலைஞர்: நான் சொல்றது உங்க தம்பியை அல்ல, கட்சித் தொண்டர்களை.
அவங்களுக்கு தினமும் கடிதம் எழுதனும்.
புஷ்: அத்தனை பேருக்கும் லெட்டர் எழுதனும்னா வேற வேலையே பார்க்க
முடியாதுங்களே.
கலைஞர்: உங்களுக்கு விஷயமே புரிய மாட்டேங்குது. ஒரு நியூஸ்
பேப்பர் ஆரம்பிச்சு அதுல லெட்டர் எழுதுனா அவங்க வாங்கிப்
படிச்சுப்பாங்க.
புஷ்: என்ன எழுதனும்?
கலைஞர்: நீங்க இனமான இங்கிலீஷ்காரர்தானே. இங்கிலீஷ்ல கஷ்டமான
வார்த்தையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா. அதையெல்லாம் போட்டு
எழுதுங்க. அப்பதான் உங்களுக்கு இங்கிலீஷ் தெரியும்னு நம்புவாங்க.
அப்புறம் அவங்க எதைச் செய்யனும்னு நினைக்கிறோமோ அதை
செய்யாதீங்கனு எழுதனும். அவங்க புரிஞ்சுப்பாங்க.
புஷ்: செய்யாதேன்னா செய்வாங்களா!
கலைஞர்: அதான் இந்திய அரசியல். அலங்கார வளைவு, கட்அவுட்
வைக்காதீங்கனா தலைவர் வைக்க ஆசைப்படறார்னு வைப்பாங்க.
புஷ்: அப்புறம் வேறென்ன செய்யணும்.
கலைஞர்: அம்பது வருஷமா ஆராய்ச்சி பண்ணி வைச்சிருக்கிறதை ஒரே
நாள்ல சொல்லிட முடியுமா?
புஷ்: சரியண்ணேன். நான் அப்புறம் வரேன்.
கலைஞர்: அண்ணேனு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களே நீங்க அரசியல்ல
தேறிடுவீங்க.
கலைஞர் வீட்டிலிருந்து ஜார்ஜ் புஷ் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
ஜெயலலிதா வீட்டிற்குப் போகிறார்.
ஜெயலலிதா: வாங்க மிஸ்டர் புஷ். உக்காருங்க.
புஷ்: சுற்றும்முற்றும் பார்க்கிறார். ஒரே ஒரு நாற்காலிதான்
இருக்கிறது. அதிலும் ஜெயலலிதா உட்கார்ந்து கொள்கிறார்.
புஷ்: உட்கார, சேரே இல்லீங்களே!
ஜெயலலிதா: பாலிடிக்ஸ்ல இதாங்க முக்கியம். மத்தவங்க உக்கார இடம்
கொடுத்துடக்கூடாது. என்னோட மீட்டிங்கல எல்லாம் ஒரு சேர்தான்.
அதையே நீங்களும் ஃபாலோ பண்ணுங்க.
புஷ்: கட்சித் தலைவர்களை எப்படிச் சமாளிக்கிறதுனுதான் தெரியலை.
கட்சி மாறிடுவாங்களோனு பயமா இருக்கு.
ஜெயலலிதா: கட்சில தலைவர்களா? என்ன கட்சி நடத்துறீங்க? கட்சில
உங்களைத் தவிர வேற தலைவரே இருக்கக் கூடாது. வெரி பேட்.
புஷ்: இருக்கிறவங்களை என்ன பண்றது?
ஜெயலலிதா: ரொம்ப சிம்பிள். கட்சியை விட்டு அனுப்பிடுங்க.
அப்புறம் உங்களுக்கு உடன்பிறவா சகோதரி, சகோதரன் யாராவது
இருக்காங்களா?
புஷ்: என்னங்க இது? அவரு என்னனா அண்ணனு கூப்பிடச் சொல்றாரு,
தம்பிக்கு லெட்டர் போடச் சொல்றாரு. நீங்க உடன்பிறவா சகோதரன்
வேணும்னு சொல்றீங்க.
ஜெயலலிதா: இங்க எல்லாமே குடும்ப அரசியல்தான். அப்புறம் இன்னொரு
முக்கியமான விஷயம். உங்களுக்கு பரபரப்பா அறிக்கை விடத் தெரியுமா?
புஷ்: எப்படி?
ஜெயலலிதா: அல்கோர் கையைப் பிடிச்சு இழுத்தாரு, வைன்ல விஷம்
வைக்கப் பார்த்தாருனு பரபரப்பா அறிக்கை விடணும்.
புஷ்: ஐய்யய்யோ அப்படிலாம் எதும் நடக்கலைங்க.
ஜெயலலிதா: பரவால. அது அப்புறம் கதை. மக்கள் மறந்திடுவாங்க. ஆமா
உங்களுக்குக் கூட்டணி கட்சிகள்லாம் இருக்காங்களா?
புஷ்: ஏங்க?
ஜெயலலிதா: மிரட்டறதுக்கு ஆள் இல்லைனா, அவங்களைதானே மிரட்டணும்.
எப்பவும் யாரையாவது மிரட்டிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி
மக்கள் நம்பகிட்ட பவர் இல்லேனு நினைச்சுடுவாங்க.
புஷ்: அப்புறம்?
ஜெயலலிதா: ஸாரி. உங்க டைம் முடிஞ்சிருச்சு. நீங்க கிளம்பலாம்.
புஷ் பரிதாபமாய் கிளம்புகிறார்.
ஜெயலலிதா: இப்படி பந்தாவும் நிறைய காட்டணும். இல்லாட்டி யாரும்
மதிக்க மாட்டாங்க. அப்புறம் இன்னொரு விஷயம் உங்க ஊர்ல கால்ல
விழுவாங்களா?
புஷ்: என்னது அது?
ஜெயலலிதா: அடுத்த தடவை வாங்க. அதலாம் பத்திச் சொல்றேன்.
(புஷ் விடை பெறுகிறார்)
-எபி
நன்றி அம்பலம்.கொம் |