|
சென்னை நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய என்னவெல்லாம்
தெரிந்திருக்க வேண்டும் என்பது குறித்த ஒரு விளக்க கையேடு இது.
ரன்னிங்: எந்தப் பேருந்தும் நிறுத்தத்தில் நிற்க வேண்டும் என்ற
கட்டாயம் ஏதுமில்லை. அதுவும் பெரும் கூட்டமாக வருபவை நிச்சயமாக
நிற்காது. எனவே, அதன் பின்னாலேயே ஓடிச் சென்று ஏற வேண்டும்.
கூட்டம் இல்லையென்றாலும் நிற்காமல் செல்ல வாய்ப்புண்டு. எனவே
ஓட்டப்பயிற்சி
அவசியம்.
லாங்க் ஜம்ப்: இது பேருந்துகளைத் துரத்தி ஓடும்போது தடைகளைத்
தாண்டி ஓடவும், ஓடும் வண்டியிலிருந்து குதிக்கவும் பயன்படும்.
பயிற்சி இல்லையென்றாலும் கல்லூரி மாணவர்களைப் பார்த்து
நேரிடையாகப்
பயிற்சி பெறலாம்.
ஹை ஜம்ப்: சில நேரங்களில் பேருந்துகளின் படிகள் உயரமாக
இருக்கலாம். அல்லது பள்ளமான ஓர் இடத்தில் வண்டி நிற்கலாம்.அப்போது உயரத்திலிருந்து இறங்க! (குதிக்க) இது அவசியமாகிறது.
டாப் பார்: இது பெரும்பாலான ஆண்களுக்கும், உயரம் அதிகமுள்ள
பெண்களுக்கும் பொருந்தும். பேருந்தின் உயரத்திலுள்ள கம்பியை
பிடித்துக் கொள்ள உதவும். பேருந்து வளைவுகளில் திரும்பும்போதும்,
திடீர் பிரேக் அடித்து நிற்கும்போதும் இது விழாமலிருக்க
இப்பயிற்சி உதவும். படிக்கட்டுகளில் தொங்கிப் பயணம் செய்ய
பிரமாதமாக பயன்படும்.
பாரலல் பார்: இது முக்கியமாக குறைந்த உயரமுடைய பெண்களுக்கும்,
ஐம்பது வயதிற்கு மேலான ஆண்களுக்கும் பொருந்தும். இருக்கைகளின்
மேல் பொருத்தப்பட்டுள்ள கம்பிகளை பிடித்துக் கொண்டு நிற்க
இப்பயிற்சி உதவும்.
ஸ்கிப்பிங் அல்லது ஜிம்னாஸ்டிக்: இது முழுக்க, முழுக்க
பெண்களுக்கானது. இடி இராஜாக்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள
இப்பயிற்சி மிகவும் பயன்படும். மேலும், 'குளிக்காமல்' வரும்
பயணிகள் மீது முடிந்தவரை சாயாமல் இருக்கப் பயன்படும். சென்னையில்
உள்ள தண்ணீர் பற்றாக்குறைதான் காரணம் என்றாலும்கூட.
வெர்ஸ்ட்லிங்: இது ஆண்களுக்கே பிரதானமானது. அடித்துப் பிடித்துக்
கொண்டு ஏறவும், இறங்கவும், பேருந்தில் நடக்கவும், சண்டையே
ஏற்பட்டாலும் சமாளிக்க இது உதவும். நாற்றம் பிடித்த ஆண்களைச்
சமாளிக்கவும் உதவும்.
மியூசிகல் சேர்: பேருந்து 'டெப்போ'வில் கிளம்புகையில் ஏறி
உட்கார்ந்து கொள்ள இது மிக அவசியம். அதிக தூரம் பயணம்
செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விளையாட்டு.
இவை தவிர இரண்டு விதிகள் உண்டு.
விலையுயர்ந்த பைகளை எடுத்துச் செல்லக் கூடாது. பணம் போன்ற
பொருட்களை பைகளில் (மறைத்து) எடுத்துச் செல்லக் கூடவே கூடாது.
வெளிப்படையாக தெரியும் 'பிளாஸ்டிக்' பைகளையே பயன்படுத்துங்கள்.
இரண்டு மூன்று எலும்புத் துண்டுகள், ஒரு குட்டிச் சாத்தான்
பொம்மை வைத்திருந்தால் திருடர்கள் தொட மாட்டார்கள்.
ஆண், பெண் இருபாலருமே முகத்தை எப்போதும் 'சீரியஸ்' ஆக வைத்துக்
கொள்ள வேண்டும். 'உர்'ரென்று வைத்துக் கொள்வது அதைவிட நல்லது.
யார் எதைக் கேட்டாலும் வாய் திறந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.
அப்படியே நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் எந்தக் கேள்விக்கும் 'தெரியாது'
என்று பதில் சொல்லவும். இல்லாவிடில் கைமாத்து பத்து ரூபாய்
கேட்டுவிடுவார்கள்.
இதர தேவைகள்
மோப்பம்: இந்த சக்தி அவசியத் தேவை. டிரைவர் பஸ் ஸ்டாப்பில்
நிறுத்துபவரா? அல்லது பத்தடி தள்ளி நிறுத்துபவரா? எந்த சாலையில்
எந்த தலைவர் வருகிறார், எப்போது டிராஃபிக் நிறுத்தப்படும் போன்ற
சின்னச் சின்ன விஷயங்களை மோப்ப சக்தியால உணர்ந்துக் கொள்வது
பலனளிக்கும்.
பஞ்சு: காதில் வைத்துக் கொள்வதினால் நிறைய சௌகர்யங்கள் உண்டு.
கண்டக்டரின் சில்லறை திட்டுக்களிலிருந்து சக பயணியின் பின்லேடன்
ஆராய்ச்சிகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
வேப்பண்ணெய்: கூட்டம் அதிகமான பேருந்துகளில் போகும்போது பின்னால்
கழுத்தில் கொஞ்சம் தடவிக் கொண்டு போனால் அதிகம் நெருக்க
மாட்டார்கள்.
பின்குறிப்பு: இந்தக் கையேடு சாதாரண காலத்தில் சென்னையில் ஓடும்
மாநகரப் பேருந்துகளுக்கே பொருந்தும். வேலை நிறுத்தம் காலங்களில்
ஓடும் மினி பஸ்களுக்கல்ல.
நன்றி அம்பலம்.கொம் |