|
தருமி, நக்கீரரிடம் சிவபெருமான் நடத்திய திருவிளையாடலை
திரைப்படத்தில் பார்த்து ரசித்திருப்போம். அந்தத் திருவிளையாடல்
இன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்ற ஜாலி
கற்பனை இதோ.
பாண்டிய மன்னன் தன்னுடைய கோட்டையை சென்னைக்கு மாற்றி ஆட்சி
புரிந்து வருகின்றார். திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம்
ஏற்படுகின்றது. உடனே சபையைக் கூட்டுகிறார். தன்னுடைய சந்தேகத்தை
தெரிவிக்கிறார்.
பாண்டிய மன்னன்: அரசவைப் புலவர்களே! நேற்று மாலை என் மனைவி
பாண்டிமாதேவியுடன் பெசன்ட் நகர் பீச்சுக்கு உலாவச்
சென்றிருந்தேன். அங்கு அழகான சில பெண்கள் ஜீன்ஸ் அணிந்து
சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஓரக்கண்ணால் 'சைட்'
அடித்துக் கொண்டிருந்தபோது மனைவியிடம் மாட்டிக் கொண்டேன்.
இப்பிரச்னையால் எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை
வருகிறது. என்னுடைய சந்தேகம் என்னவென்றால் கல்யாணமான எல்லா
ஆண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்குமா, இல்லையா என்பதுதான்.
என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்கு ஒரு கணினி பரிசாக
அளிக்கப்படும் என்று எல்லா செய்தித்தாள்களிலும் அறிவியுங்கள்.
மன்னனின் ஆணைப்படி அனைத்து செய்தித் தாள்களிலும் அறிவிப்பு
வருகிறது. கணினியைப் பெற கடும் போட்டி. ஏழைப் புலவன் தருமிக்கும்
கணினி ஆசை வர கபாலீஸ்வரர், கோயில் போகிறார். அங்கு உட்கார்ந்து
பாட்டெழுத முயலுகிறார். ஆனால் முடியவில்லை. ஐயோ சந்தேகத்திற்கு
பாட்டெழுத முடியவில்லையே என்று புலம்புகிறார்.
அந்த சமயத்தில் சிவபெருமான் அங்கு புலவராகத் தோன்றுகிறார்.
சிவ: புலவரே! ஏன் புலம்புகிறீர்கள்?
தருமி: யாரய்யா அது?
சிவ: என் பெயர் கபாலி! பாட்டெழுதும் புலவன்.
தருமி: எனக்குப் போட்டியா வந்துருக்கியா நீ.
சிவ: நான் யாருக்கும் போட்டியில்லை புலவரே! உனக்கு உதவவே
வந்திருக்கிறேன்.
தருமி: எனக்கு உதவப் போறியா என்ன உதவி. என்னோட புலம்பலைப் பங்கு
போடப் போறியா?
சிவ: இல்லை. உமக்கு கவிதை எழுத உதவப் போகிறேன்.
தருமி: ஆ! கவிதை எழுத உதவப் போகிறாயா? முதலில் உன்னுடைய புலமையை
நான் சோதிக்க வேண்டும்.
சிவ: என்னையே சந்தேகிக்கிறாயா?
தருமி: இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது!
சிவ: சரி. கேள்வியை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?
தருமி: நானே கேட்கிறேன். எனக்குக் கேட்கத்தான் தெரியும்.
பிரிக்க முடியாதது என்னவோ?
சிவ: பெண்களையும் மெகா சீரியலையும்.
தருமி: முடிவே இல்லாதது?
சிவ: காஷ்மீர் பிரச்னையும் ஈழப் பிரச்னையும்.
தருமி: தீர்வு காண முடியாதது?
சிவ: காவிரி பிரச்னை.
தருமி: கண்டுபிடிக்க முடியாதது?
சிவ: வீரப்பனை.
தருமி: அதிசயமான விஷயம்?
சிவ: கிரிக்கெட் மேட்சில் இந்தியா வெற்றி பெறுவது.
தருமி: கட்டுப்படுத்த முடியாதது?
சிவ: சென்னை கொசுக்களை.
தருமி: தெரிந்தது?
சிவ: அரசியல்வாதிகளின் ஊழல்.
தருமி: தெரியாதது
சிவ: ஆந்த்ராக்ஸ் கிருமி.
தருமி: அழகுக்கு?
சிவ: ஐஸ்வர்யாராய்
தருமி: ஆட்டத்துக்கு?
சிவ: மும்தாஜ்.
தருமி: ஊழலுக்கு?
சிவ: லல்லு.
தருமி: தாவலுக்கு?
சிவ: ராமதாஸ்.
தருமி: அறிவுக்கு?
சிவ: நான்
தருமி: ஆசைக்கு?
சிவ: நீ
தருமி: ஐயா! நீயே எல்லாம் அறிந்த புலவர். எனக்குப் பாட்டை
எழுதிக் கொடும்.
சிவபெருமான் தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுக்க, அதை
எடுத்துக்கொண்டு தருமி பாண்டிய மன்னனிடம் சென்று கொடுக்கிறான்.
பாட்டை படித்த மன்னன் மகிழ்ச்சியுற்று தருமிக்கு கம்ப்யூட்டரை
அளிக்கச் சொல்கிறான். அந்த நேரத்தில் நக்கீரர் குறுக்கிடுகிறார்.
நக்: புலவரே! பாட்டில் குற்றம் இருக்கிறது. இந்தப் பாட்டை நீர்
எழுதவில்லை என்று எனக்குத் தெரிகிறது. யாரோ எழுதிக் கொடுத்ததைக்
கொண்டு வந்திருக்கிறீர். எழுதிய புலவரை கூப்பிட்டு வாரும்.
தருமிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஆஃப்கான் அகதி போல்
மீண்டும் கோயிலுக்கு வந்து புலம்புகிறார். சிவபெருமான் கபாலிப்
புலவராக மீண்டும் தோன்றி விஷயத்தைக் கேட்டறிகிறார்.
கோபம் கொண்டு கோட்டையை நோக்கிச் செல்கிறார்.
சிவ: யாரங்கே? என் பாடலில் குற்றம் கண்டுபிடித்தது?
நக்: கோபப்படாதீர்கள்! நான்தான் உங்களைக் கூப்பிட்டு அனுப்பினேன்.
சிவ: என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்?
நக்: முதலில் உன் பாட்டைக் கூறும்.
சிவ: ''மனைவி முகத்தைப் பார்த்து பார்த்து
காய்ந்து போன கண்கள் இரண்டும்
'ஜீன்ஸ்' பெண்ணை 'சைட்' அடித்தல்
ஆண்களுக்கு இயல்புதான்''
இதுதான் என் பாட்டு. இதில் என்ன குற்றம் கண்டீர்.
நக்: சொற்சுவையில் அல்ல. பொருட்சுவையில்தான் குற்றம். நீ பாடிய
பாடலின் பொருளைக் கூறும்.
சிவ: எத்தனை நாள்தான் மனைவி முகத்தை மட்டுமே 'சைட்' அடித்துக்
கொண்டிருப்பான் ஒரு ஆண் மகன். அவ்வப்போது வெளியில் செல்லும்போது
அழகான பெண் எதிர்ப்பட்டால் அவளை 'சைட்' அடிப்பது தப்பில்லை.
எல்லா ஆண்களுக்கும் அது இயல்பாகவே வரும். இதுதான் என் பாடலின்
பொருள்.
நக்: நீ கூறுவது எல்லா ஆண்களுக்கும் பொருந்துமா.
சிவ: ஆம்! எல்லா ஆண்களுக்கும் பொருந்தும்.
நக்: நான் அன்றாடம் வணங்கும் சிவபெருமானுக்குக் கூடவா?
இதைக் கேட்டவுடன் சிவபெருமான் கோபம் கொண்டு நெற்றிக் கண்ணைத்
திறந்து காட்டுகிறார்.
நக்: நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
சிவ: நானே சிவபெருமான் என்று தெரிந்தும் கூடவா பேசுகிறாய். உன்னை
என்ன செய்கிறேன் பார்.
சிவபெருமான் நக்கீரரைத் துரத்த அவர் ஜெமினி மேம்பாலத்தின்
அடியில் ஒளிந்து கொள்கிறார். சிவபெருமான் தேடித் தேடி அலுத்துப்
போய் கூறுகிறார்.
சிவ: நக்கீரா! நான் உன்னை மன்னித்து விட்டேன்! உன் தைரியத்தைப்
பாராட்டுகிறேன். வெளியில் வா.
சிவபெருமான் இவ்வாறு கூறியவுடன் நக்கீரர் பாலத்தில் இருந்து வெளி
வருகிறார். பாண்டிய மன்னர், தருமி, நக்கீரர் எல்லோரும் அண்ணாசாலை
மேம்பாலத்தில் நிற்கிறார்கள்.
''அய்ய! கஸ்மாலம் வூட்லே சொல்லிக்கினு வந்துட்டுயா?'' என்று
அவர்கள் நடுவே ஒரு ஆட்டோ சீற கலைந்து ஓடுகிறார்கள்.
-கோட்டீஸ்வரன
நன்றி அம்பலம்.கொம் |