|
ஒரு குடிகாரரிடம் அவரது குவார்ட்டர் அனுபவங்களைக் கேட்டபோது ஒரு
காக்டெய்ல் பார்ட்டியே வைத்து விட்டார். நீங்களும் அனுபவியுங்கள்.
என்ஜாய்.
'விட்டது சனியன்; விட்டது சனியன் விட்டது நம்மை விட்டதடா!
கொட்டுக முரசு கொம்பெடுத்தூது கொடும்பாவிக் கள்ளைக் கொளுத்தி
விட்டோமென்று!'
-என்று ராஜாஜி மதுவிலக்கை முதன்முதலாக தமிழ்நாட்டில்
அமல்படுத்தியபோது ஆனந்தப் பள்ளு பாடினார் நாமக்கல் கவிஞர்
ராமலிங்கம் பிள்ளை.
ஆனாலும் மதுச்சனியன் நம்மை விட்டதா? நாம்தான் அதை விட்டோமா?
எதிர்வீட்டில் ஒரு தினக்கூலித் தொழிலாளி. காலையில் ஒழுங்காக
வேலைக்குச் செல்லும் இவர், மாலையில் குடித்துவிட்டு தள்ளாடிக்
கொண்டுதான் வீடு திரும்புவார். அவரது மனைவி கேட்டாள்: ''ஏன்யா!
காலையிலே அரச கட்டளை எம்.ஜி.ஆர். மாதிரி கம்பீரமாக போறே!
சாயங்காலம் அடிமைப்பெண் எம்.ஜி.ஆர். மாதிரி தள்ளாடிகிட்டு
வர்றியே!''
'காந்தி ரோடு
வழியே போகுது
பிராந்தி லோடு'
என்று என் நண்பர் ஒரு புதுக்கவிதை எழுதினார்.
காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டாலும் ஒரு பிராந்திக் கடையில் மறைமுகமாக
விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒருவர் வந்து ''குவார்ட்டர்
கிடைக்குமா?'' என்று ரகசியக் குரலில் கேட்டார். கடைக்காரன் உள்ளே
திரும்பி, ''எலே, காந்தி! சாருக்குக் குவார்ட்டர் குடு'' என்றார்.
''காந்தி ஈஸ் த ஃபாதர் ஆஃப் நேஷன். பிராந்தி ஈஸ் த ஃபாதர் ஆஃப்
ஓஷன் (கடல்)'' என்று பொன்மொழி உதிர்த்தார் ஒரு குடிமகன்.
சரக்கில் எதனோடு எதைக் கலக்க வேண்டும் என்று கூட சில ஃபார்முலாக்கள்
இருக்கிறதாம்.
பிராந்தி வித் சோடா
விஸ்கி வித் வாட்டர்
ஜின் வித் லெமன்
மென் வித் உமன்
என்று பாட்டுச் சொன்னார் ஒரு 'பட்(¬)ட கூத்தர்'
கொசப்பேட்டை வேலுவும் கொண்டித் தோப்பு மாரியும் 'பெக் உட்டுகினு'
பேசிக் கொண்டிருந்தார்கள்.
''எங்க நைனா, சம்பாரிச்ச துட்டை எல்லாம் குடிச்சே
அய்ச்சிட்டாம்ப்பா!''
''ஒனக்கு ஒன்னும் வச்சிட்டுப் போகலியா?''
''சோமாரி, சொட்டு கூட வைக்கலே.''
சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே அதிகமாக
மதுக்குடிக்கிறவர்கள் தமிழ்நாட்டினர்தானாம். வட மாநிலங்களில்
பார்த்தால் மதுக்கடைகள் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒருமணி
நேரத்துக்கு ஒருவர்தான் வந்து மது வாங்கிச் செல்கிறார்.
கோடைகாலத்தில் தாம்பரம் தாண்டி எல்லா ஊர்களிலும் கள் இறக்கி
விற்கிறார்கள். போலீசுக்கு மாமூல் போகிறது. ஆனாலும் சுத்தமான கள்
கிடையாது. நிறைய தண்ணீர் ஊற்றி போதைக்கு உரிய மருந்து
மாத்திரைகள் கலந்து கலப்படம் செய்துதான் விற்கிறார்களாம்.
பனை மரத்தடியில் இரண்டு பேர் பேசிக் கொண்டார்கள்: ''மாட்டுக்கு
வயசு கண்டுபிடிக்கிறது எப்படிண்ணே?''
''பல்லை வைச்சித்தாண்டா!''
''கோழிக்கு வயசைக் கண்டுபிடிக்கிறது எப்படிண்ணே?''
''அதுவும் பல்லை வைச்சித்தாண்டா!''
''கோழிக்கு ஏதுண்ணே பல்லு?''
''மடையா! கோழிப் பல்லைச் சொல்லலேடா, நம்ம பல்லைச் சொன்னேன்.
கறியை மெல்லும்போது கோழி இளசா, முத்தலான்னு தெரியுமே!''
பத்தாண்டுகளுக்கு முன்பு இரண்டு நண்பர்கள் வழியில் சந்தித்துக்
கொண்டால், ''வாங்க, டீ சாப்பிடுவோம்'' என்று டீக்கடை பக்கம்
ஒதுங்கிய காலம் போயிற்று காண்! இப்போது அபூர்வ சந்திப்பு
நிகழ்ந்த அடுத்த நிமிடம் அருகிலிருக்கும் பிராந்திக் கடைக்குப்
போய் 'பெக்' சாட்சியாக பிரலாபிக்கிறார்கள்.
கோவைக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன். ஒருவர் மினரல் வாட்டர்
பாட்டிலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் குடித்துக்
கொண்டிருந்தார். தாகத்தால் நான் ஒரு மிடறு கேட்டேன். அவர் என்
காதோடு, ''சாரி, ஜின் வாங்கி தண்ணீரில் கலந்து இந்தப் பாட்டிலில்
ஊற்றி குடித்துக் கொண்டிருக்கிறேன்.'' என்றார். பஸ்ஸில் 'புகை
பிடிக்காதீர்' என்று மட்டும்தான் போட்டிருந்தது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் பாண்டிச்சேரி சரக்குகளை மலிவு
விலையில் விற்கிறார்கள். இந்தப் பாட்டில்கள் பாண்டியிலிருந்து
கடத்தப்படுவது எப்படி? தனியார் பஸ்ஸில் டேப்ரிக்கார்டர் மூலம்
பாட்டு ஒலிபரப்புகிறார்கள். இதற்கு பஸ்ஸின் இருபுறமும் ஸ்பீக்கர்
இருக்கும். ஸ்பீக்கரைக் கழற்றிவிட்டால் உள்ளே கூடுபோல நீண்ட
பொந்து. அந்தப் பொந்தில் சரக்குகளைத் திணித்து மீண்டும்
ஸ்பீக்கரை பொருத்தி விடுவார்களாம். சென்னை வந்து இறக்கிக் கொள்ள
வேண்டியதுதான்.
எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர், சரியான மதுப்பிரியர். இதனால்
சாயங்காலமானதும் பிளாஸ்கை எடுத்துக்கொண்டு காபி வாங்க
கிளம்புவதுபோல போய், குவார்ட்டர் வாங்கி பாதியை அங்கேயே
சாப்பிட்டு விட்டு மீதியை பிளாஸ்கில் ஊற்றி வீட்டுக்கு எடுத்து
வருவார். வீட்டில் பாட்டிலோடு வந்தால் மருமகளுக்குத் தெரிந்து
விடுமாம்.
எம்.ஜி.ஆர். தன் படங்களில் தான் மட்டுமல்ல; வில்லன்கூட மது
அருந்துகிற மாதிரி காட்சியை அனுமதிக்க மாட்டாராம். இப்போதுள்ள
ஹீரோக்கள் எல்லோரும் தன் படங்களில் ஒரு காட்சியாவது 'தண்ணி
அடிக்கிற' மாதிரி வைக்காமல் விடுவதில்லை.
கருவக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தாள் ஒரு
பெண். பிடிப்பதற்கு இரண்டு போலீஸ்காரர்கள் போனார்கள். கண்டதும்
அந்தப் பெண் ஓடினாள். போலீஸார் துரத்தினார்கள். அவள் திடீரென்று
ஆடைகளைக் களைந்து போட்டு விட்டு நிர்வாணமாக ஓடினாள். துரத்திய
போலீஸ் 'திக்'காகி, வந்தவழியே திரும்பி ஓடினார்கள்.
கல்வராயன் மலை, கொல்லி மலைப் பகுதிகளில் கடுக்காய் கொண்டு
சுத்தமான மூலிகைச் சாராயம் விற்கிறார்கள் மலை ஜாதியினர்.
போலீசுக்கு மாமூல் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வீடு
காய்ச்சுகிறார்கள். பெரும் பகுதியை அவர்களே குடித்து
விடுகிறார்கள். இங்குள்ள பெண்கள் நாளொன்றுக்கு ஒரு லிட்டர்
சாராயம் தாராளமாகக் குடிக்கிறாள்.
டாக்டரிடம் வந்தார் ஒரு குடிகாரர். பரிசோதித்து விட்டு டாக்டர்
சொன்னார்: ''உங்கள் உடலும் குடலும் கெட்டுப் போனதற்கு இவ்வளவு
நாளாக நீங்கள் குடித்துவந்த சாராயம்தான் காரணம்!''
நோயாளி சொன்னார்: ''நீங்கதான் டாக்டர் சரியா சொன்னீங்க.
மத்தவங்க எல்லாம் நான்தான் காரணம்னு சொல்றாங்க''
-ஆர்.சி.சம்பத
நன்றி அம்பலம்.கொம் |