www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

தமிழ் லினக்ஸ் உம் எழுத்தாளர் சுஜாதாவும் -2: (1)(2)(3)(4)
-வெங்கட்(கனடா)-மூலம்:வெங்கட் வலைப்பூ

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் தமிழ் லினக்ஸ் திட்டம் பற்றி நண்பர் முகுந்தராஜ் (தமிழ் மோசிலா, தமிழ் ஓப்பன் ஆபீஸ் குழு) எழுதிய கடிதத்தைச் சில வாரங்களுக்கு முன் இங்கு முன்னிலைப்படுத்தியிருந்தேன். தொடர்ந்து நான் அவரை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். பல முயற்சிகளுக்குப் பிறகு அவரிடமிருந்து கிடைத்த ஏமாற்றம் தரும் பதிலை இங்கு முன்னிலைப்படுத்தியிருந்தேன்.

இப்பொழுது தமிழ் லினக்ஸ் குழுவினரிடையே அவருடைய திட்டத்தில் சம்பளம் பெற்றுப் பணியாற்றும் சிலரும் பங்களிக்கும் தன்னார்வலர்களும் திரு சுஜாதா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் அவர் தமிழ் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணைமூல நிரலிகளுக்கு அளிக்கும் பங்கிற்கு எல்லோரும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஒரு மறைமுகமான விளம்பரங்களைச் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் லினக்ஸின் தற்பொழுதைய நிலை என்ன, இதை முன்னெடுத்துச் செல்பவர்கள் (உண்மையாகவே) என்பவை போன்ற சில விபரங்களை வெளியிடவிருக்கிறேன். இதன் முதல் கட்டமாக, நான் திரு சுஜாதாவிற்கு எழுதிய கடிதம் இங்கே. இது அவரால் புறங்கையால் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அன்புள்ள திரு சுஜாதா,

பல நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த இந்தக் கடிதம் ஒத்திப்போடப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணமாக என்னுடைய வேலை, குடும்பம் இவற்றை நான் சுட்டினாலும் சடத்துவம்தான் (inertia) உண்மை என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கடிதத்தின் நோக்கம் தங்களுடைய "தமிழ் பிசி" என்பதைப் பற்றிப் புரிந்து கொள்வது.

2002 டிசம்பர் 08 ஆனந்த விகடன் இதழில், மைக்ரோஸாப்டின் பில் கேட்ஸ் இந்திய வருகையை ஒட்டி, திறந்த ஆணைமூலத்தின் சிறப்பைப் பற்றியும், இந்தியாவில் அதன் தேவை குறித்தும் உங்கள் "கற்றதும் பெற்றதும்" தொடரில் எழுதியிருந்தீர்கள். அந்தக் கட்டுரையில் நான் உள்ளிட்ட (வெங்கட் ராமன் என்று நீங்கள் குறித்திருந்தது என்னைத்தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்தக் குழுவில் அந்தப் பெயரில் வேறு யாரும் கிடையாது) எங்கள் குழுவைப் பாராட்டியும் இருந்தீர்கள். அந்த முறை, எங்களுடைய தமிழ் கணினி நடவடிக்கைகள் தமிழக வெகுஜன ஊடகத்தில் முதன்முறையாக உங்கள் மூலம் கவனத்துக்கு வந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அதனால் எங்களுடன் திறமை மிகுந்த தமிழக் இளைஞர்கள் சேருவார்கள் என்று நம்பியிருந்தோம் (இன்றுவரை தமிழில் திறந்த ஆணைமூல நிரலிகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு மிக அதிகம்).

அதே கட்டுரையில் "வெளிவரவிருக்கும்" மாண்ட்ரேக் லினக்ஸில் தமிழ் பயன்பாடுகள் கிடைப்பதைக் குறித்தும் எழுதியிருந்தீர்கள். அந்த நேரத்தில் மாண்ட்ரேக் வெளிவந்திருந்தது. என்னுடைய சில தமிழ் லினக்ஸ் நண்பர்கள் உங்கள் கட்டுரை வெளியாவதற்கு முன்னால் அதன் குறுந்தகட்டை அம்பலம் அலுவலகத்தில் உங்களிடம் கொடுத்ததாக விவாதக் குழுவில் எழுதியிருந்தார்கள்.

பிறகு, கடந்த தமிழிணைய மாநாட்டில் (2003) உங்கள் உரை/கட்டுரையில் இதற்கு விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். அதில் நீங்கள் பல காலமாக நாங்கள் விவாதித்து வரும் ஒற்றைத் தகுதரம் பிரச்சனையைத் தொகுத்துச் சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் திறந்த ஆணைமூலத் திட்டங்களை அதிகம் விரித்துச் சொல்லாமல் போய்விட்டீர்கள். சில வாரங்களுக்கு முன்னால் நீங்கள் அம்பலம் மின்னிதழில் "தமிழ் பிசி" திட்டத்தைப் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். காசு கொடுத்துப் படிக்க வேண்டிய இணைய தளமான அம்பலத்தில் தளையறு மென்கலன் (Free Software) திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள என்னாலும் என்னுடைய திறந்த ஆணைமூல நண்பர்களாலும் இயலவில்லை. எனவே, இன்றுவரை அதில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.

கடந்த வாரம் ஆனந்த விகடனில் மீண்டும் "கற்றதும் பெற்றதும்" தொடரில் திறந்த ஆணைமூலத்தைக் குறித்து எழுதினீர்கள். இந்த முறை உங்கள் தமிழ் பிசி திட்டத்திற்குத் தன்னார்வலர்கள் தேவை என்ற அழைப்பை விடுத்திருக்கிறீர்கள். இது குறித்த ஆர்வமுள்ளவர்கள் உங்களுடன் (அல்லது உங்கள் குழுவுடன்) தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய இந்தத் திட்டத்திற்கு ரெட்ஹாட் இந்தியா (இது வர்த்தக நிறுவனத்தின் பெயர், இதைச் செந்தொப்பியாக ஆக்குவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. "தமிழ் பிசி" என்ற உங்கள் திட்டத்திற்கு உதவி செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தமிழ்ப்படுத்துவது அவசியம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்).

---
இந்தக் கடித்தத்தை எழுத எனக்கிருக்கும் தகுதிகளாக நான் கருதுவதைக் குறித்த ஓரிரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மீண்டும் தொடருகிறேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக என்னுடைய அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுத LaTeX பயன்படுத்துவதில் தொடங்கி (இதன் என்னுடைய சில பங்களிப்புகளை பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்) இன்றுவரை தொடர்ந்து வருகிறது. லினக்ஸின் துவக்கத்தை அருகிலிருந்து கவனித்தவன் (என்னுடைய படிப்பு கணினி பற்றிக் கிடையாது) என்ற முறையில் லினக்ஸ், தளையறு மென்கலன், பகிர்தலின் அவசியம் பற்றி விளக்கவும், தமிழ் லினக்ஸ்க்குப் பங்களிக்கவும் "ஒரு பெங்குவின் தமிழ்க் கற்றுக் கொள்கிறது" என்ற தொடரை திண்ணை மின்னிதழில் எழுதினேன். லினக்ஸ் ஆவணப்படுத்தும் திட்டத்தின் மூலமாக "தமிழ் லினக்ஸ் - எப்படி" என்ற விளக்கக் கையேட்டை எழுதித் தொடர்ந்து பராமரித்து வருகிறேன். தமிழில் முதன் முதல் துவக்கப்பட்ட உள்ளூர்மயமாக்கல் திட்டமான கேடிஈ திட்டத்தில் ஆரம்ப காலத்திலிருந்து பங்களித்திருக்கிறேன். உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) - பணிக்குழு-7 (தமிழ் லினக்ஸ்) தலைவராக இருக்கிறேன். கடந்த சான்பிரான்ஸிஸ்கோ தமிழிணைய மாநாட்டில் (2002) தமிழ்ப் பள்ளிகளில் லினக்ஸ் மூலம் கணினி கற்பித்தலைப் பற்றிய ஒரு திட்டத்தை மாநாட்டின் முக்கிய உரையாக வழங்கினேன். தமிழ் லினக்ஸ் குறித்த செயல்பாடுகளை அறிவிக்க தமிழ்லினக்ஸ்.ஆர்க் இணைய தளத்தை மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறேன்.
----

இனி தமிழில் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணை மூல நிரலிகளில் தன்னார்வக் குழுக்களின் பங்களிப்புகளையும் சாதனைகளையும் பற்றி கொஞ்சம்;

1. கேடிஈ மூலமாக தமிழ் முதல் இந்திய மொழி இடைமுகமாக வெளிவந்தது. (சிவக்குமார் சண்முகசுந்தரம், வசீகரன், குழு)

2. முனையத்தில் தமிழ் பயன்பாடுகள் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக வடிக்கப்பட்டது. (சிவராஜ், குழு)

3. தமிழ் க்னோம் திட்டம் இந்திய மொழிகளிலேயே முன்னோடியானது. (தினேஷ் நடராஜா, குழு)

4. இந்திய மொழிகளியே முதன் முறையாக, முற்றிலும் தமிழாலான இடைமுகம் கொண்ட மேசைத்தளத்துடன் மாண்ட்ரேக் லினக்ஸ் 9.0 வெளிவந்தது. (பிரபு ஆனந்த், குழு)

5. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக யுனிக்கோட் உருவேற்றி பாங்கோ மூலம் (சிவராஜ், விக்ரம், குழு)

6. ஓப்பன் ஆபீஸ் அலுவல் செயலி தமிழ்ப்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. (லினக்ஸ், மைக்ரோஸாப்ட் இயக்கு தளங்களுக்கு) (முகுந்தராஜ், குழு)

7. சிக்கலான அறிவியல் ஆவணங்களை வடிக்க தமிழ் லேட்டக்ஸ் நான்கு வருடங்களாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. (வசீகரன்)

8. திறந்த ஆணை மூல இணைய உலாவி மோஸிலா முற்றிலும் தமிழ்ப்படுத்தப்பட்டு லினக்ஸ் தவிர மைக்ரோஸாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பல இயக்கு தளங்களுக்குக் கிடைக்கிறது. (முகுந்தராஜ், குழு)

9. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக அதிகார்வபூர்வ "எப்படி" ஆவணம் தமிழில். (வெங்கட்ரமணன், குழு)

10. இதைத் தவிர பல எழுத்துரு தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் எழுத்துருக்களைத் தளையறு மென்கலன் அனுமதியுடன் வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் பல செயலிகளும் பயனுதவிக் கருவிகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன.

11 இவற்றை எல்லாம் எளிதாக விளக்கும் வகையில் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக Knoppix, Demolinux வெளியீடுகளைத் தமிழ்ப்படுத்தி இலவசமாக செய்முறை விளக்கக் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கணினியில் லினக்ஸை நிறுவாமலே இயக்கிப் பார்க்க முடியும். (வசீகரன்).

-----

இவற்றை முன்னின்று பல்வேறு குழுக்கள் நடத்தி வருகின்றன. இவற்றுக்கென இணையத்தின் வழி இயங்கும் பல விவாதக் குழுக்கள் இருக்கின்றன. இந்த விவாதக் குழுக்களில் பங்கேற்பது எளிது, தன்னார்வலர்கள் தாமாகத் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இவற்றில் முக்கியமானது யாகூ குரூப் தளத்தின் வழி இயங்கும் tamilinix செய்திக் குழு. செய்திகளை அறிவிக்க tamillinux.org என்ற இணைய தளம் இயங்கி வருகிறது. கருவிகளின் சேமிப்பிற்கு உலகெங்கிலும் இருக்கும் பல தொழில்நுட்பர்கள் பயன்படுத்தும் sourceforge.org இணையதளத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு பல சிறு திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் பலவும் காலம் காலமாக உலகெங்கும் இருக்கும் திறந்த ஆணை மூல நிரலர்களை அடியற்றி திறந்த முறையில், பெரும்பாண்மை கருத்துகளுக்கு மதிப்பளித்து நடத்தப்படுகின்றன.

இவற்றைப் பற்றியெல்லாம் கட்டாயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், இவ்வளவு விரிவாக எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை. இணையத்தில் கூகிள் போன்ற தேடல் இயந்திரங்களில் தமிழையும் இவற்றையும் இணைத்து நடத்தப்படும் தேடல்களில் இவை குறித்த தகவல்தான் முன்னணியில் வரும். (உதாரணம்: tamil +linux).

இந்தத் திட்டங்கள் எதுவும் எந்த ஒரு நிறுவனத்திடமோ, அரசமைப்பிடமோ, கல்விக் கூடங்களிடமோ நிதியுதவி பெற்று நடப்பதில்லை.
 

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]