www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

தமிழ் லினக்ஸ் உம் எழுத்தாளர் சுஜாதாவும் -3: (1)(2)(3)(4)
-வெங்கட்(கனடா)-மூலம்:வெங்கட் வலைப்பூ

இனி உங்கள் 'தமிழ் பிசி' திட்டத்தின் தேவை, அதன் நடைமுறைகள் குறித்த சில கேள்விகளுக்குத் தாங்கள் விளக்கமளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

1. தமிழில் ஏற்கனவே தொடங்கி தீவிரமாக நடந்துவரும் தன்னார்வத் திட்டங்களைப் புறக்கணித்துத் தாங்கள் புதிதாக ஒரு திட்டத்தை முன்னின்று நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?

2. உங்களுடைய 2002 டிசம்பர் கற்றதும் பெற்றதும் கட்டுரையிலேயே நீங்கள் இந்தத் திட்டங்கள் பலவும் கிட்டத்தட்ட 60% முடிவடைந்த நிலையில் இருப்பதாகப் பாராட்டியிருக்கிறீர்கள். இவற்றை முற்றாக நீங்கள் இப்பொழுது புறந்தள்ளக் காரணம் என்ன?

3. தமிழில் லினக்ஸ், கேடிஈ, மொஸிலா, ஒப்பன் ஆபீஸ் என்று பல ஏற்கனவே (இலவசமாகக்) கிடைத்துக் கொண்டிருக்க இவற்றை நீங்கள் திரும்பச் செய்வதாக அறிவிப்பதன் நோக்கம் என்ன?

4. அப்படி ஏற்கனவே சாதிக்கப்பட்டவற்றின் தரத்தில் தங்களுக்கு அதிருப்தி இருந்தால் எளிதில் அனுகக் கிடைக்கும் அந்தக் குழுக்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் வல்லமைகளை அவர்களுக்கு அளிக்க, அவர்களை வழி நடத்த, முயற்சித்தீர்களா?

5. திறந்த ஆணைமூல தயாரிப்பு வழியில் "பிளத்தல்" (forking) என்பது மிகவும் பாவகரமான செயலாகக் கருதப்படும். ஒரு திட்டத்தைப் பிளப்பதற்கு முன் அது சம்பந்தமான குழுக்களில் அதைப் பற்றித் திறந்த அறிவிப்புடன் ஜனநாயக முறையில் கருத்துக் கணிக்கப்படும். கருத்து மாறுபாடுகள் அலசப்பட்டு ஒருமித்த முடிவெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பின்னர், தவிர்க்க முடியாத பட்சத்தில் திட்டம் பிளவுபடும். இரண்டு குழுக்களும் மீண்டும் திறந்த வழியில் செயல்படத் துவங்கும். இது போன்ற திறந்த ஆணைமூலத் இயக்க விதிகளை நீங்கள் அறிவீர்களா? (மேலதிக விபரங்களுக்கு எரிக் ரேமண்ட்-ன் தி கதீட்ரல் அன்ட் தி பஸார்" புத்தகத்தைப் பார்க்கவும்). உங்களுடைய நடவடிக்கைகள் மூலம் அந்தப் பாவத்தைச் செய்வதாக அறிகிறீர்களா?

6. ஒருக்கால் உங்களுக்கு இருக்கும் பிரபலத்தின் அடிப்படையிலும், அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் இவற்றிலிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் பணபலத்தின் மூலமும் உங்கள் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்குவதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக உலகெங்கும் பரவிக்கிடக்கும் பல தன்னார்வலர்கள் தாங்கள் பாடுபட்டுச் சேர்த்தப் பணத்தையும் (அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லோரும் பணக்காரர்கள் அல்லர்; எங்களில் சிலர் மாலை நேரங்களில் வேலை செய்து படிக்கும் மாணவர்கள்), தங்கள் நேரத்தையும் செலவிட்டு முன்னெடுத்துச் சென்ற திட்டங்கள் தீய்ந்து போகுமானல் உங்களுக்கு அதனால் பெருமையா?

7. இந்தத் திட்டங்களை முன்னின்று நடத்த நீங்கள் அரசாங்கத்திடமிருந்தும் கல்விக்கூடங்களிடமிருந்து பெற்ற மானியங்கள் வழக்கமாக அரசாங்கத் திட்டங்களைப் போல திறந்த முறையில் அழைப்பு விடுக்கப்பட்டு தேர்ந்த அறிஞர்களின் கருத்துப்படி (Peer Review Process) பரிந்துரைக்கப்பட்டவையா?

8. அப்படியென்றால் உங்களுடன் கூட மாற்றுத் திட்டங்களை அரசாங்கத்தின் முன் வைத்தவர்கள் யார் என்பதைக் காட்ட முடியுமா? (ரெட் ஹாட், அம்பலம் டிஷ்நெட் போன்ற தனியார்களின் உதவிகளைப் பற்றிக் கேட்கவில்லை).

9. இந்த வாரம் தமிழ்லினிக்ஸ் யாகூ குழுமத்தில் வெளியான அழைப்பின்படி நீங்கள் விரைவில் கேடிஈ தொடர் மொழியாக்கத்தில் ஈடுபடப்போவதாக அழைப்பு வந்திருக்கிறது. இந்த அழைப்பில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கும், தங்கள் மானிய உதவியின் கீழ் சம்பளத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கும் தகுதி/பங்களிப்பு அடிப்படையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?

10. அந்தத் தொடர் மொழியாக்க நிகழ்வில் பங்குபெற்றவர்களுக்குத் தங்கள் கையப்பமிட்ட புத்தகங்களைப் பரிசாகத் தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக பலனை எதிர்பாராமல் பங்களித்து வரும் தன்னார்வலர்களை ஏதாவது ஒரு வகையில் பாராட்ட வேண்டும் என்று முயன்றிருக்கிறீர்களா?

11. மானிய உதவியின் கீழ் வேலை செய்பவர்களின் உதவியுடனும், மொழிபெயர்ப்புக்குப் பாராட்டாக புத்தகங்களைப் பெற்றுக் கொள்பவர்களின் துணையுடனும் இந்தியாவில் (தமிழகத்தில்) தளையறு மென்கலன் கொள்கைகள், ஆணை மூலங்களைப் பகிர்தலின் அவசியம், தற்சார்பின் முக்கியத்துவம் இவற்றை முன்னெடுத்துச் செல்லமுடியும் என்று நினைக்கிறீர்களா?

12. மாறாக இது ரெட் ஹாட் நிறுவனத்தின் முழு நேரப் பணியா? அப்படியென்றால் அழைக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு இது தெளிவாக்கப்பட்டிருக்கிறதா?

13. உங்கள் தமிழ் பிசி திட்டத்திற்கென தனியான மொழியாக்க அகராதியை உருவாக்கி வருவதாக அறிகிறோம். ஏற்கனவே, இணையத்தின் வழி (உத்தமம்) பல்வேறு அறிஞர்களை உள்ளடக்கிய மொழியாக்கக் குழுவின் பரிந்துரைகளை விட்டு விலகக் காரணம் என்ன? (இந்தத் தொகுப்பு அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் ஈழத்து அறிஞர்களின் தொகுப்பு இவற்றின் அடிப்படையிலானது). அப்படி அவற்றில் பெரும் பிழைகள் இருப்பதாகக் கருதினால் அந்தக் குழுக்களில் இடம் பெற்று அவர்களை வழி நடத்த முயன்றீர்களா? உத்தமத்தின் குழுக்களில் ஜனநாயக முறையில் பங்கேற்க முடியும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்தானே?

இது குறித்த என்னுடைய (எங்களில் பலருடைய) சந்தேகங்களுக்கு தாங்கள் தனிப்பட்ட முறையிலோ, பொதுவிலோ விளக்கமளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் தனிப்பட்ட முகவரி எனக்குத் தெரியாது என்பதால் தமிழ் பிசியின் முகவரிக்கு அனுப்பியிருக்கிறேன். இதைத் தாங்களோ, அல்லது தமிழ் பிசி திட்ட நண்பர்களோ தங்கள் பார்வைக்குக் கிடைத்தது என்று உறுதிப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன். இல்லாத பட்சத்தில் இது தங்களை அடைய என்னுடைய சென்னை நண்பர்கள் மூலமாக முயற்சி செய்வேன்.


தங்கள் பதிலை எதிர்பார்த்து.

அன்புடன்
வெங்கட்
(http://www.tamillinux.org/venkat/myblog)

----
Dr. V. Venkataramanan
Toronto, Canada

venkat rogers.com
http://www.tamillinux.org

தொடர்பான ஆனந்தவிகடன் பக்கங்கள்

http://www.vikatan.com/av/2002/dec/08122002/av0909.shtml

http://www.vikatan.com/av/2003/nov/30112003/av0907.shtml

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]